Quantcast
Channel: அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!
Viewing all 1968 articles
Browse latest View live

சித்தன் அருள் - 926 - ஆலயங்களும் விநோதமும் - மகாலிங்கசுவாமி கோவில், திருவிடைமருதூர், தமிழ்நாடு!

$
0
0

மருத மரத்தைத் தல மரமாகக் (ஸ்தல விருட்சம்) கொண்டு சிறப்புற விளங்குகின்ற சிவன் கோயில்கள் இந்தியாவில் மூன்று.

முதலாவது ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம் எனும் திருக்கோயில். 

இரண்டாவது மத்தியார்ஜுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர்.

மூன்றாவது புடார்சுனம் எனப்படுகின்ற திருநெல்வேலிக்கு அருகே அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூர்.

இவை முறையே மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்சுனம் (தலைமருது, இடைமருது, கடைமருது) எனப் புகழப்பெறுகின்றன.

திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

சரி! நாம் தெரிந்துகொள்ள இங்கு என்ன உள்ளது!

இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார்.

மூகாம்பிகை சன்னதி:-  இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் மட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமென்பதால் "பிரம்மஹத்தி"தோஷ நிவாரண தலம் இது. அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். மகாலிங்கேஸ்வரர் திருத்தலத்தை சுற்றி நான்கு வீதிகளிலும் சிவ ஸ்தலங்கள் உள்ளதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

எல்லா கோவில்களிலும் பரிவார தேவதைகள், இறைவனை சுற்றி இருக்கும். இந்த கோவிலின் பரிவார தேவதைகள், சுற்றியுள்ள ஊர்களில், தனித்தனி கோவில்களில் அமர்ந்துள்ளனர்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................ தொடரும்!

சித்தன் அருள் - 927 - ஆலயங்களும் விநோதமும் - சக்ரபாணி கோவில், கும்பகோணம்!

$
0
0

சக்கரபாணி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவக்கோயில் ஆகும். இந்த கோவில் கும்பகோணம் தொடருந்து நிலையத்தில் இருந்து வட மேற்கு நோக்கி 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் உள்ள இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர ஷேத்திரம் என்றழைக்கப்படுகிது.

ஒரு சமயம் திருக்குடந்தையில் தங்கித் தவம் செய்த தேவர்களும் முனிவர்களும், அசுரர்களால் துன்புறுத்தப்பெற்றார்கள். அவர்களைக் காக்கவேண்டி காவிரியில் இருந்த சுதர்சன சக்கரத்தினைக் கொண்டு திருமால், அசுரர்களை வீழ்த்தித் தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார். சக்கரத்தினைக் கரத்தில் கொண்டு விளங்குவதால் சக்கரபாணி என்று பெயர் பெற்றார். இந்தியத்துணைக்கட்டணத்தில் சக்கரராஜனுக்கு என்று அமைந்த ஒரே திருக்கோயில் இதுவேயாகும். இந்த திருத்தலத்தில் சூரியதேவனின் ஆணவத்தினை அடக்க விஷ்ணு சக்கர ரூபம் கொண்டுள்ளார்.வைணவ திருத்தலங்களில் சூர்ய ஸ்தலம்.

ஜலந்தராசுரன் என்ற அசுரனை அழித்து வருமாறு, திருமால் தனது சக்கராயுதத்தை அனுப்பினார். அதன்படி பாதாள உலகத்தில் இருந்த அசுரனை அழித்த சக்கராயுதம், கும்பகோணம் திருத்தலத்தில் பொன்னி நதியில் நடுவில் பூமியை பிளந்து கொண்டு மேலெழுந்து வந்தது. அப்பொழுது புண்ணிய நதியில் நீராட வந்த பிரம்மதேவன், திருமாலின் அம்சமான ஸ்ரீசக்கரத்தை, காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்து, சக்கரபாணி சுவாமியாக நினைத்து வழிபட்டு வந்தார்.

சக்கரபாணி சுவாமியின் பேரொளியைக் கண்ட சூரியன், பிரம்மதேவர் எச்சரித்தும் கேட்காமல், தன் ஒளியைக் கூட்டி வெப்பத்தால் உலகைச் சுட்டெரிக்க முற்பட்டார். ஆனால் சக்கரபாணி சுவாமி, சூரியனின் ஒளி முழுவதையும் கிரகித்து சூரியனை வலுவிழக்கச் செய்து விட்டார். தன் தவறை உணர்ந்த சூரியன், சக்கரபாணி சுவாமியைப் பணிந்து வழிபட்டு தன் சக்தியை மீண்டும் பெற்றார். இதனால் கும்பகோணத்திற்கு ‘பாஸ்கர ஷேத்திரம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

ஒளியிழந்த சூரியன் தன்னொளி தனக்கு மீளவும் கிடைக்க ஸ்ரீசக்கரத்தையே சரணடைந்து பிரார்த்திக்க வைகாசி மாத பௌர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து, ஸ்ரீசக்கரபாணி சுவாமி மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடனும் அருட்காட்சி தந்து ஆதவனின் ஒளியை மீளவும் தந்துஅருள் செய்தார். தன் பெயரில் பாஸ்கர சேத்திரம் என இத்தலம் அமையப்பெறவேண்டும் என வரம் பெற்ற சூரியன் ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு கோயில் நிர்மாணித்து பாஸ்கர சேத்திரம் என்னும் இத்திருத்தலத்தை வழிபாடு செய்தான்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

12 கருட சேவை:- கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற மூன்றாவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப் பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.

காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய துறை, இப்பொழுதும் ‘சக்கர படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்கரப் படித்துறையில் நீராடுவது, காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு ஒப்பானது.

சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு எங்கும் இல்லை.

சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை. பொதுவாக சிவன் கோவில்களில்தான் வில்வஇலையால் அர்ச்சனை நடைபெறும். அதே நேரத்தில் பெருமாளுக்கு உகந்தது துளசி இலை. ஆனால் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில் பெருமாளுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

சித்தன் அருள் - 928 - ஆலயங்களும் விநோதமும் - வேத நாராயண சுவாமி கோவில், நாகலாபுரம், சித்தூர்!

$
0
0

நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோயில் தமிழக எல்லையோரத்தில் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம். தமிழகம் பறிகொடுத்த எல்லை பகுதியில் இந்த நாகலாபுரமும் ஒன்று. திருமால் மச்சவடிவில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக இத்தலத்தில் காட்சிதருவது இத்தலத்தின் சிறப்பாகும்.

மச்ச அவதாரம் திருமாலின் தசாவதாரங்களில் முதன்மையான அவதாரமாகும். கோமுகன் என்னும் அசுரன் பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான் . அசுரனை கண்டுப்பிடித்த திருமால் மச்சவடிவில் அவராதம் செய்து கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார் என்று மச்ச புராணம் சொல்லுகின்றது.

நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இத்தலத்தில் கொடுத்தன் காரணமாக இங்கு அருளும் பெருமாளின் திருப்பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

பங்குனி மாதம் வளர்பிறையில் (சுக்லபட்சம்) மூன்று நாட்கள் துவாதசி, திரயோதசி, சதுர்த்தி ஆகிய திதிகளில் மாலையில் சூரியன் பெருமாளை வழிபடுவதாக ஐதிகம். முதல் நாள் சூரியனின் ஒளிக்கதிர் பெருமாளின் பாதத்தை தொட்டு வழிபடுகின்றார். இரண்டாம் நாள் சூரியன் பெருமாளின் திருமார்பை தொட்டு வழிபடுகின்றார். மூன்றாம் நாள் பெருமாளின் தலைப்பகுதியை ஒளிக் கதிர்களால் தழுவி வழிபடுவது சிறப்பு. 

இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே. மூலவர் வேதநாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி–பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது.

பெருமாள், வலது கையில் சக்கரத்தை, எய்தும் நிலையில் பிடித்திருப்பது, மிகுந்த விசேஷமாக கருதப்படுகிறது. அவரை வணங்குபவரை, எந்நேரமும் காக்க, தயாராக நிற்கிற கோலம்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....................தொடரும்!

சித்தன் அருள் - 929 - ஆலயங்களும் விநோதமும் - ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்காவல், திருச்சி!

$
0
0

"துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே"

என திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற இறைவனே  ஜம்புகேஸ்வரர் ஆக திருவானைக்காவலில் குடி கொண்டுள்ளார்.   

திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல், திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.

இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது.

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக, இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டு வந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை தேவையற்றதாக கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.

சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

சரி! இங்கு நாம் தெரிந்து கொள்ள என்ன உள்ளது?

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர். மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள்.

அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகையின் திருக்கரங்களிலிருந்த நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால், லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.

பல அரிய சிற்பங்களும் இத்தலத்தில் காணக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னதிக்கு இடதுபுறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத்தூண்களில் இந்த சிற்பம் காணக் கிடைக்கின்றது. அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சன்னதிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.

அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மிக்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளாள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..................தொடரும்!

சித்தன் அருள் - 930 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ பகவதி கோவில், சக்குளத்துக்காவு, கேரளா!

$
0
0

​சக்குளத்துக்காவு பகவதி கோவில், நீராற்றுபுரம், ஆலப்புழை மாவட்டம், கேரளாவில் அமைந்துள்ளது. திருவல்லா என்கிற ரயில் நிலையத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்த கோவிலில் குடியிருக்கும் அன்னை, துர்கை வடிவினள். பாம்பை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோவில், ஏராளம் பக்தர்கள், வழிபடும் தெய்வமாக போற்றப்படுகிறாள். சோற்றானிக்கரை பகவதி கோவில் அளவுக்கு மிக பிரபலமான கோவில்.

சரி! இந்த கோவிலில் நாம் தெரிந்து கொள்ள என்ன உள்ளது!

கார்த்திகை மாதத்தில் இந்த கோவிலில் பொங்கல் படையல் அன்னைக்கு போடப்படுகிறது. திருவனந்தபுரம் ஆற்றுக்கால் கோவில் பொங்கல் படையல் விசேஷம் போலவே, இங்கும், முதல் அடுப்பு, கோவில் சார்பாக, பூஜாரி, அம்பாள் சன்னதி விளக்கிலிருந்து அக்னியை எடுத்து, மூட்டுவார். அதிலிருந்து, மற்ற அடுப்புகளுக்கு, அக்னி பகிர்ந்து கொடுக்கப்படும்.

இந்த பொங்கல் படையல் போடுகிற பக்தர்கள் கூட்டம் 20-40 கிலோ மீட்டர் வரை வரும்.

இங்கு அமர்ந்திருக்கும் அம்பாள் சன்னதிக்கு மேலே, மேற் கூரை கிடையாது. பஞ்ச பூதங்கள் அனைத்தையும் தன் தலையில் சுமந்தபடி அமர்ந்திருக்கிறாள்.

இந்த கோவிலின் முதன்மை பூசாரியிடம் ஏழு வெற்றிலை, இரண்டு பாக்கு வாங்கிக்கொடுத்தால், அப்படி கொடுத்தவருக்கு என்ன பிரச்சினை இருக்கு, எதற்காக வந்திருக்கிறார், அதற்கு என்ன பரிகாரம் என்பதை மிக துல்லியமாக, அம்மையிடம் கேட்டு சொல்லிவிடுவார். மிக மிக சரியாக இருக்கும். பரிகார விதி தெரிந்து, தங்கள் வாழ்க்கையை சரி பண்ணிக்கொண்ட பக்தர்கள், ஏராளம்.

அனைவரும் ஒருமுறை சென்று பார்க்க வேண்டிய அருமையான கோவில்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்! ​

சித்தன் அருள் - 931 - அகத்தியப் பெருமானின் அருள்வாக்கு!

$
0
0

சித்தன் அருள்..........தொடரும்!

சித்தன் அருள் - 931 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ பகவதி கோவில், மண்டைக்காடு, நாகர்கோயில்!

$
0
0

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருத்தலம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். 'பெண்கள் இந்தக் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும்; அனைத்து தோஷங்களும் நீங்கும்'என்பது ஐதீகம். கேரள மாநிலத்திலிருந்து ஏராளமான பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், `பெண்களின் சபரிமலை'என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.  

பகவதி அம்மன் புற்றுவடிவில் சுயம்புவாகத் தோன்றிய சிறப்புடைய இந்தக் கோயிலில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும்விதமாக, பல கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன் அடர்ந்த காடாக இருந்த இந்தப் பகுதியில், சுற்றுப்புற கிராமங்களிலுள்ள மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி வருவது வழக்கம். ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் இருந்ததால், 'மந்தைக்காடு'என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் 'மண்டைக்காடு'என்று மருவியதாகக் கூறுகின்றனர். இந்தப் பகுதியில்தான் பகவதி அம்மன் புற்று வடிவில்  பக்தர்களுக்குக் காட்சி தந்ததாகக் கூறுகிறார்கள்.

முற்காலத்தில் இந்தப் பகுதியைச் சேர்ந்த கிராமங்களில் காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்ற கொள்ளை நோய்கள் பரவின. நோயைக் குணப்படுத்த போதிய மருத்துவ வசதி இல்லாததால் மக்கள் கடும் துன்பத்துக்கு ஆட்பட்டனர். ஒரு கட்டத்தில் ஊரையே காலி செய்துவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது. அவர்களின் துன்ப இருளைப் போக்கவந்த விடிவெள்ளியாக ஒரு சாது மண்டைக்காட்டுக்கு வந்தார். 63 கோணங்களுடன் ஒரு சக்கரம் வரைந்து, தினமும் பூஜை செய்தார். தம் தவ வலிமையால் மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்தார். திக்கற்ற தங்களுக்கு, சாதுவின் வடிவில் தெய்வமே துணை வந்ததாக எண்ணிய கிராம மக்கள், அவரை பக்தியுடன் வழிபட்டனர். நீண்டகாலம் அங்கே தங்கியிருந்த சாது, மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்ததுடன், சிறுவர்களை மகிழ்விக்க சித்து விளையாட்டுகளும் செய்து காட்டினார்.

சாது ஶ்ரீசக்கரம் வைத்து வழிபட்ட இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. ஒருமுறை ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். புல்லை மேய்ந்துகொண்டிருந்த ஓர் ஆடு, அங்கு வளர்ந்திருந்த புற்றை மிதித்துவிட்டது. உடனே புற்றிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்துபோன சிறுவர்கள், புற்றை உதைத்ததால் ஆட்டின் காலில் அடிபட்டு ரத்தம் வந்திருக்குமோ என்று நினைத்து, ஆட்டின் காலைப் பார்த்தபோது, காயம் எதுவும்  இல்லை. புற்றிலிருந்துதான் ரத்தம் வருகிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட சிறுவர்கள், ஊர்ப் பெரியவர்களிடம் சென்று கூறினார்கள். அவர்களும் புற்று இருந்த இடத்துக்கு வந்து, சிறுவர்கள் கூறியது உண்மைதான் என்பதைப் புரிந்துகொண்டார்கள். மேலும், ஏதேனும் தெய்வக் குற்றம் நிகழ்ந்துவிட்டதோ என்று அச்சப்பட்டார்கள். தகவல் அரசருக்கும் தெரிய வந்தது. பரிவாரங்களுடன் வந்து பார்த்த மன்னரும் அதிர்ச்சி அடைந்தார். அரண்மனை ஜோதிடர், ''அரசே, அச்சம் வேண்டாம். இந்த இடத்தில் ஏதோ ஒரு தெய்வசக்தி குடிகொண்டிருக்கிறது. மக்களின் பிணி தீர்க்க வந்த சாது, இந்த இடத்தில்தான் ஶ்ரீசக்கரம் வைத்து பூஜை செய்து வந்தார்''என்று கூறினார். மறுநாள் காலையில் மேற்கொண்டு விசாரிக்கலாம் என்று முடிவு செய்த மன்னர் அரண்மனைக்குத் திரும்பினார்.

அன்றிரவு, மன்னரின் கனவில், கோடி பௌர்ணமி நிலவின் பிரகாசத்துடன் காட்சி தந்த பகவதி அம்மன், ''குழந்தாய், அச்சம் வேண்டாம். இங்கு வாழும் மக்களின் துன்பங்களைப் போக்கி, அவர்களை சுபிட்சமாக வாழ வைக்கவே நான் இங்கே குடிகொண்டுள்ளேன். இன்று முதல் என்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிவேன். நான் குடிகொண்டுள்ள புற்றிலிருந்து வடியும் ரத்தம் நிற்கவேண்டுமானால், புற்றில் களபம் (அரைத்த சந்தனம்) சாத்தி வழிபடவேண்டும்''என்று கூறி மறைந்தார்.

கனவில் பகவதி அம்மனை தரிசித்த சிலிர்ப்புடன் உறக்கத்திலிருந்து விழித்த மன்னர், பக்திப் பரவசம் மேலிட்டவராக பொழுது விடிவதற்குக் காத்திருந்தார். மந்திரி பிரதானிகளையும் அரண்மனை ஜோதிடர்களையும் அழைத்துக்கொண்டு மண்டைக்காடு வந்து, புற்றின் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். பின்னர், பகவதி அம்மன் கனவில் கூறியதுபோல், புற்றில் சந்தனம் சாத்தி வழிபட்டார். மன்னர் களபம் சார்த்தி வழிபட்டதும் புற்றில் ரத்தம் வடிவது நின்றது. பகவதி அம்மன் தன் கனவில் தோன்றியதையும், புற்றில் பகவதி தேவி குடியிருப்பதையும் மன்னர் மக்களுக்கு விளக்கிச் சொன்னார். இந்த இடம் புனிதத் தலம் என்றும். இங்கு தினமும் பூஜை மற்றும் வழிபாடு நடத்த வேண்டும் என்றும் மன்னர் உத்தரவிட்டார். அதன் பிறகு புற்றைச் சுற்றிலும் ஓலை வேயப்பட்டு நித்தமும் விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.

மக்களின் பிணி தீர்க்க வந்த சாது, அம்மன் புற்றில் எழுந்தருளிய காட்சியைத் தரிசித்து உள்ளம் குளிர்ந்தார். மண்டைக்காட்டில் எழுந்தருளத் தன்னை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்ட அம்மனின் கருணையை எண்ணி மெய்சிலிர்த்துப் போனார். தாம் வந்த வேலை முடிந்தது என்று நினைத்த சாது, தாம் சமாதியடைய திருவுளம் கொண்டார். மண்டைக்காடு  பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரே இடப் புறத்தில் ஆழமாக ஒரு குழி தோண்டினார். பின்னர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, ''நான் இந்தக் குழியில் தியானம் செய்யப்போகிறேன். நான் தியானத்தில் ஆழ்ந்ததும், இந்தக் குழியை மண்ணால் மூடிவிட்டு மறுநாள் காலையில் வந்து பாருங்கள்''என்று கூறினார்.

ஏற்கெனவே பல சித்து விளையாட்டுகளைத் தங்களுக்குக் காட்டியவர் என்பதால், இதுவும் அவருடைய சித்து விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்த சிறுவர்கள், சாது கூறியபடியே, அவர் தியானத்தில் ஆழ்ந்ததும் மண்ணைக் கொட்டி குழியை நிரப்பினர். ஊருக்குத் திரும்பிய சிறுவர்கள் நடந்ததை ஊர்மக்களிடம் தெரிவித்தனர். மறுநாள் காலையில் ஊர்மக்கள் அனைவரும் அங்கே சென்றனர். சிறுவர்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது, குழிக்குள் சாது தியானத்தில் ஆழ்ந்ததுபோல் இருந்தார். அவரிடம் எந்த ஒரு சலனமும் இல்லை. அவர் சமாதி அடைந்துவிட்டார் என்பதை உணர்ந்த மக்கள், தங்கள் பிணி தீர்க்கும் கற்பகத்தருவாக வந்த சாது, தங்களை விட்டுச் சென்றுவிட்டதை உணர்ந்து, முன்போலவே மண்ணைக் கொட்டி, குழியை மூடிவிட்டு, சென்றனர். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரில் இப்போது அமைந்திருக்கும் பைரவர் சந்நிதிதான், சாதுவின் சமாதி என்று கூறுகிறார்கள். மண்டைக்காடு பகவதிக்கும், பின்னர் சாதுவின் சமாதி பீடத்திலும் நைவேத்தியம் செய்கிறார்கள். இன்றைக்கும் இந்த நடைமுறை வழக்கத்திலுள்ளது

ஓலைக்குடிசையாக இருந்த இந்தக் கோயில், கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்தின் ஒரு அங்கமாக அப்போது இருந்தது. கொல்லம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வியாபாரிகள் மாட்டுவண்டியில் தேங்காய், புளி போன்ற பொருள்களை மண்டைக்காடு வழியாக கிழக்குப் பகுதிகளுக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்வது வழக்கம். ஒருநாள் கொல்லத்தைச் சேர்ந்த வியாபாரி, தன் வியாபாரத்தை முடித்துவிட்டு மாட்டுவண்டியில் மண்டைக்காடு வழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்தது. நீண்ட தூரப் பயணத்தால் களைப்படைந்த வியாபாரி, பக்கத்தில் உணவு விடுதி ஏதும் இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தார். மண்டைக்காடு கோயில் அருகில் வந்தவர், அங்குள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து,  "பசி வயிற்றைக் கிள்ளுகிறது. இந்தப் பகுதியில் விடுதி ஏதாவது இருக்கிறதா?"என்று கேட்டார். கடவுள் நம்பிக்கை இல்லாத அந்த நபர், விளக்கொளியில் மிளிர்ந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலைச் சுட்டிக்காட்டி, ``அதோ வெளிச்சம் தெரிகிறதே... அது விடுதிதான். நீ அங்கு சென்றால் உணவு கிடைக்கும்"என்று விளையாட்டாகச் சொன்னார். பசி மயக்கத்தில் இருந்த அந்த வியாபாரி, சற்றுத் தெம்பு வந்தவராகக் கோயிலை நோக்கிச் சென்றார். ஓலை வேயப்பட்ட கோயிலுக்கு முன்பு மாட்டு வண்டியை நிறுத்தியவர், கோயிலுக்குள் நுழைந்தார். அங்கு வியாபாரி எதிர்பார்த்தபடி கோயில் விடுதியாகக் காட்சியளித்தது.

அங்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவரிடம், ``பசிக்கிறது, சாப்பிட ஏதாவது கொடுங்கள்"என்று கேட்கவும், இலையில் அறுசுவை உணவைப் படைத்து வழங்கினார் அந்த மூதாட்டி. இதுவரை அவர் வாழ்வில் உண்டிராத சுவையுடன் அமிர்தம் போன்று இருந்தது அந்த உணவு. அத்துடன் நிற்காத மூதாட்டி வண்டியை இழுத்துவந்த காளை மாடுகளுக்குத் தண்ணீரும் தீவனமும் தயாராக இருப்பதாகக் கூறினார். காளை மாடுகளுக்கு உணவு கொடுத்த வியாபாரி, நள்ளிரவு ஆகிவிட்டதால் அங்கேயே தங்கினார். உண்ட மயக்கத்தில் கண்ணயர்ந்த கேரள வியாபாரி, காலையில் கண்விழித்துப் பார்த்தபோது, மூதாட்டி யாரும் அங்கு இல்லை. இரவு விடுதி என நினைத்து தங்கிய இடத்தில் கோயில் இருப்பதைக் கண்டார். இரவு நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்த அவருக்கு ஓர் உண்மை புலப்பட்டது. இரவு உணவளித்தது பகவதி அம்மன்தான் என்பதை உணர்ந்தார். நெஞ்சுருகி அம்மன் பாதத்தில் விழுந்து வணங்கினார். வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை துணியில் கட்டி கோயில் திருப்பணிக்கான காணிக்கையாக வைத்தார். பின்னர், தனது ஊரான கொல்லத்துக்குச் சென்று மண்டைக்காட்டில் நடந்த அதிசயத்தை மக்களிடம் சொன்னதுடன், அமுது படைத்த பகவதி அம்மனுக்கு பொங்கல் சமைத்து படையல் செய்வதற்காக, ஆண்டுதோறும் இருமுடி கட்டி மண்டைக்காட்டுக்கு வரத் தொடங்கினர். இருமுடியில் ஒருமுடியில் பொங்கலிடத் தேவையான பொருள்களும் மற்றொரு முடியில் பூஜைக்குத் தேவையான பொருள்களும் இருக்கும். 'அம்மே சரணம், தேவி சரணம், மண்டைக்காட்டம்மே சரணம்'; 'சரணம் தா தேவி, சரணம் தா தேவி பொன்னம்மே'என்று சரண கோஷம் ஒலிக்க, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் இருமுடி சுமந்து பக்திப் பரவசத்துடன் மண்டைக்காட்டுக்கு ஆண்டுதோறும் வருகிறார்கள்.

ஓலையால் வேயப்பட்ட மண்டைக்காடு கோயிலின் மேற்கூரையை அடிக்கடி மாற்றி அமைக்கவேண்டிய நிலை அப்போது இருந்தது. சுயம்புவாக மண்புற்றில் எழுந்தருளிய அம்மன் வளர்ந்துகொண்டே போனதுதான் அதற்குக் காரணம். மூலஸ்தானத்தில் அம்மன் தொடர்ந்து வளர்ந்து வந்ததால், மேற்கூரையை உயர்த்திக்கொண்டே செல்வது பக்தர்களுக்கு சிரமமாக இருந்தது. எனவே, இதுகுறித்து அம்மனிடம் நெஞ்சுருக பக்தர்கள் வேண்டினர். புற்றை ஒழுங்குபடுத்தி சந்தனம் சாத்தினால், ஒருநிலையில் நிற்பதாக அம்மனின் அருள்வாக்கு கிடைத்தது. இதையடுத்து அம்மன் முகம் வடக்குமுகமாக அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சுத்தமான சந்தனத்தை புற்றுக்குள் நிறைக்கும் சடங்கு நடக்கிறது.

மண்டைக்காடு பகவதி அம்மன் வீற்றிருக்கும் பகுதி தென்னை மரங்களால் சூழ்ந்திருக்கிறது. தென்னைமரத்தில் முதலில் கிடைக்கும் தேங்காயை மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ஒருமுறை நிலக்கிழார் ஒருவர், பகவதி அம்மனுக்கு தேங்காய் அளிக்காமல் உதாசீனப்படுத்தியதால், அவருடைய தோப்பில் பறிக்கப்பட்ட அனைத்து தேங்காய்களிலும் கொம்பு முளைக்கத் தொடங்கியதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர், அம்மனின் அருளை உணர்ந்துகொண்ட நிலக்கிழார், கொம்புமுளைத்த தேங்காய்களை மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு காணிக்கையாகச் செலுத்தி தன் செயலுக்காக, மனமுருகி வேண்டிக்கொண்டாராம். அதன் பிறகுதான் அவர் தோப்பில் விளையும் தேங்காய்களில் கொம்பு முளைப்பது நின்றது. அம்மனின் இந்தத் திருவிளையாடலுக்கு சாட்சியாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் முன்பு அந்தக் கொம்பு முளைத்த தேங்காய்கள் கட்டப்பட்டுள்ளன. கொம்புடன் கூடிய தேங்காயை இன்றும் நாம் கண்கூடாகக் காணலாம்.

நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீ  தொலைவில் அமைந்திருக்கிறது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். குளச்சலில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திங்கள் சந்தை சென்று அங்கிருந்தும் பேருந்தில் செல்லலாம். அதிகாலை 5 மணி முதல் மதியம் 12:30 மணிவரையும், மாலை 5 மணிமுதல் இரவு 7:30 மணிவரையும் கோயில் நடை திறந்திருக்கும். காலை 6 மணி, மதியம் 12:30 மணி, மாலை 6 மணி, இரவு 7:30 மணி ஆகிய நேரங்களில் தீபாராதனை நடைபெறும்.

சரி! இங்கு நாம் தெரிந்து கொள்ள என்ன உள்ளது!

சாதுவாக வந்தது, சிவனின் அம்சமான பைரவர்தான். ஸ்ரீசக்ரம் புற்றுக்குள் இருப்பினும், தன இருப்பிடத்தை புற்றுக்குள் மாற்றிக்கொண்டு, இன்றும் த்யானத்தில் இருந்து வருகிறார்.

நீர்நிலைக்கு (கடல்) மிக அருகில் அமைந்துள்ள கோவில் என்பதால், 1. மிக சக்தி வாய்ந்த சன்னதி, 2. பிரார்த்தனைகள் உடன் நிறைவேறும் இடம்.

பைரவரை வழிபடும் அடியவர், ஒருமுறையேனும், சென்று தரிசிக்க வேண்டிய இடம்.

இங்கு அமர்ந்துள்ள அம்மனுக்கு பொங்கல் படையல் போட்டால், குடும்பத்தில், பிரச்சினைகள் விலகி, அமைதியாக வாழலாம்.

புற்றுள் அமர்ந்து ஸ்ரீசக்ரத்துக்கு தின பூசை செய்யும், பைரவ சித்தரின் ஜடாமுடி வளர்ந்து கொண்டே இருப்பதால், அவ்வப்பொழுது, புற்றை உடைத்துக்கொண்டு வெளிப்படும். கோவில் பூஜாரிகள், சந்தானம் ஊற்றி அந்த இடத்தை அடைப்பார்கள். உடைந்த புற்று மண்ணை பிரசாதமாக பெற்று வந்து குழந்தைகள்/பெரியவர்கள் அருந்தி வந்தால், உடல் சம்பந்தமான பிரச்சினைகள் விலகும்.

கடலுக்கு மிக அருகிலிருந்தும், சுனாமி வந்த பொழுது, இந்த கோவிலை தீண்டவே இல்லை என்பது இங்கு அமர்ந்திருக்கும் அம்பாளின் சக்தியை உணர்த்தியது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....................தொடரும்!


சித்தன் அருள் - 932 - ஆலயங்களும் விநோதமும் - ஐயாறப்பர் கோவில், திருவையாறு, தமிழ்நாடு!

$
0
0

திருவையாறு ஐயாறப்பர் கோயில் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் காவிரி கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 51வது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஐயாறப்பர், தாயார் தரும சம்வர்த்தினி.

சிலாத முனிவர் யாகசாலை நிலத்தை உழுதபோது, அவருக்குப் பெட்டியில் கிடைத்த குழந்தை செப்பேசன். தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதறிந்து, கழுத்தளவு திருக்குள நீரில் நின்று கடுந்தவம் புரிந்தான். ஐயாறப்பரின் பேரருட்காட்சியால் கங்கை நீர், சந்திர நீர், அம்மையின் திருமுலைப்பால், நந்தி வாய் நுரைநீர், கமண்டல நீர் ஆகிய ஐந்து ஆறுகளாலும் அபிடேகம் செய்யப்பெற்றார். அதன் பின் ஐயாறப்பர் செப்பேசருக்கு ஞானோபதேசமும் நந்தீசர் எனும் தீட்சாநாமமும், சிவகணத் தலைமையும் முதல் குருநாதனாம் தகுதியும் அருளினார். அத்துடன் நில்லாது, ஐயாற்றெம்பெருமான் தாமே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் திருமகளாம் சுயசாம்பிகையை பங்குனிப் புனர்பூசத்தே திருமணம் செய்துவைத்தார். அதன் தொடர்பான விழாவே சப்தஸ்தான விழாவாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் திருவையாற்றில் ’சப்தஸ்தானம்’ திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவையாறு மற்றும் அதன் அருகிலுள்ள ஏழு கோயில்களிலிருந்து கண்ணாடிப் பல்லாக்குகளில் அந்தந்தக் கோயில் கடவுளர்கள் இக் கோயிலில் சங்கமிக்கின்றனர். அங்கு ’பூச்சொரிதல்’ நடைபெறும். விழாவின் இறுதியில் பல்லக்குகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் செல்கின்றன

இவ்வூர் இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்துவந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அவ்வூர் அரசனுக்கு சென்றது. அவன் உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்தபோது சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்துகொண்டிருந்தார். மறுநாள் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊரிலிருந்து திரும்பினார். ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். இறைவன், இந்த அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து, தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரியவந்தது. தன்னை வணங்குபவர்களுக்கு அன்பு செய்பவர் ஐயாறப்பர். ஆகவேதான் தன்னைத்தானே வழிபடுவது என்ற ஐதீகத்தில் இரு இலிங்கங்களும் ஒரு அம்பாளும் வைத்து பூசிக்கப்படுகின்றன. இந்த அற்புதத்தையொட்டியே இன்றும் இக்கோயிலில் சித்திரை ஆயில்யத்தன்று சுவாமி புறப்பாடும் செய்து, இறைவனாக வந்த சிவாச்சாரியார், பூஜை முறையினராகிய சிவாச்சாரியார் என்ற ஐதீகத்தில் இருவருக்கும் பரிவட்டம் சார்த்தி, சுவாமியுடன் வலம் வரும் சிறப்பு விழா நடைபெறுகின்றது. இந்த அதிசயத்தையே மாணிக்கவாசகர் தம் அமுத வாக்கில் –ஐயாரு அதனில் சைவனாகியும்– என்று குறித்துள்ளார்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

இங்கே அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள். ஆண்கள் தர்மம் செய்வதைவிட குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் “தரும சம்வர்த்தினி” என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள். 

எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்குத் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

அப்பர் பெருமான் இத்தலத்தில் வழிபட்டு கைலாய காட்சியை பெற்றார். எனவே இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். 

மானசரோவர் ஏரியில் மூழ்கிய அப்பர் பெருமான் இந்த திருத்தலத்தில் உள்ள குளத்தில் வந்து எழுத்தார். சூரிய புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் இந்த குளம் மிகவும் விசேஷமானது. 

இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத் ததக்கது.

இங்கே மூலவர் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரைப் பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட குரு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவருக்கு “ஹரிஉரு சிவயோக தெட்சிணாமூர்த்தி” எனப் பெயர். இவர் முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு “ஐயாறப்பா” என உரக்க குரல் கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. இந்த அதிசயத்தை வேறு எங்கும் காண முடியாது!

இக்கோவிலின் தெற்கு கோபுரவாசலில் அமர்ந்திருக்கும், ஆட்கொண்டீஸ்வரருக்கு, வடைமாலை சார்த்துகிறார்கள். சிலவேளை லட்சம் வடகளினால் ஒரு மாலை உருவாக்கி சார்த்துகிறார்களாம்.

ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

சித்தன் அருள் - 933 - ஆலயங்களும் விநோதமும் - ஜகந்நாதர் கோவில், பூரி, ஒடிசா மாநிலம்!

$
0
0

ஜெகன்நாதர் கோயில் அல்லது ஜெகந்நாதர் கோயில், இந்தியாவின், கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயில் ஆகும். இக்கோயில் ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.

ஜரா என்ற வேடன் எய்த அம்பு பட்டு கிருஷ்ணர் தன் பூத உடலை விட்டு விலகினார். புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதை காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலை செய்யும் அறை கதவை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச் சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உள்ளே அமர்ந்திருந்த தச்சர் கோபமடைந்தார். 

"மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே, இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரை குறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள்"என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.

சரி! நாம் இங்கு தெரிந்து கொள்ள என்ன உள்ளது!

பகவான் கிருஷ்ணரின் உடலுக்கான இறுதி சடங்கை செய்தபின், அவரின் குலத்தவர்கள், உடலை ஒரு கட்டையில் கிடத்தி, நதியில் விட்டனர். இதை கவனித்துக் கொண்டிருந்த போகர் சித்தர், "பகவான் கிருஷ்ணர் இறைவனின் மறு அவதாரமாயினும், ஒரு சிறந்த வாசி யோகி. ஆதலால், சித்தமார்க்க முறைப்படி அவருக்கு சமாதி அமைக்க வேண்டும்"என தீர்மானித்து, அனைவரும் சென்றபின், உடலை கைப்பற்றி, கிருஷ்ணருக்கு சமாதியை அமைத்தார். பகவான் உடலை கிடத்தியிருக்கும் சந்நிதானத்தை, ஒரு சங்கின் வடிவில் அமைத்தார். ஆகவே பகவான் கிருஷ்ணரின் பூத உடல், இன்றும் பூரி ஜெகந்நாதர் சன்னதிக்கு கீழே உள்ளது.

"நாராயணீயம்"கற்று முடித்த/தேர்ந்த பக்தர்கள், ஒருமுறையேனும், இங்கு சென்று ஒரு தசகமாவது அவர் சன்னதியில் வாசித்தால்தான், பகவான் கிருஷ்ணருக்கு "குருதக்ஷிணை"கொடுத்த பலன் கிடைக்கும்.

உலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவில், இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்கிறார்கள். தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.

இந்த கோவிலின் கோபுரத்தில் கட்டப்பட்டிருக்கும் கொடியானது, காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில்தான் எப்பொழுதும் பறக்கும்.

கோவில் பூஜாரி தினமும் கோபுரத்தின் மேலே ஏறி (45 மாடி கட்டிடத்தின் உயரம் இருக்கும்) கொடியை ஏற்றுவார். ஒரு நாள் கூட தவறாமல் கொடி ஏற்றவேண்டும் என்பது விதி. ஒரு நாள் தவறினால், 18 வருடங்களுக்கு கோவிலை மூடி வைக்க வேண்டும் என்பதும் இந்த கோவிலின் விதியாக உள்ளது.

இக்கோவிலின் கோபுரத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் "சுதர்சன சக்ரம்"கோவிலை சுற்றி எங்கிருந்து பார்த்தாலும், பார்ப்பவரை நோக்கியே நிற்கும். அது 1000 கிலோ எடையுள்ளது.

இக்கோவிலின் கோபுரத்துக்கு மேலே, எந்த பறவைகளும் பறப்பதில்லை.

பொதுவாக, கடற்கரையில் அமைந்துள்ள இடங்களில், பகல் நேரத்தில், காற்று கடலிலிருந்து, ஊரை நோக்கியும், மாலை முதல் கரையிலிருந்து கடலை நோக்கியும் வீசும். இங்கு, பகல் நேரத்தில் கரையிலிருந்து கடலையும், மாலையில், கடலிலிருந்து கரையையும் நோக்கி வீசும்.

கோவிலின் கோபுர நிழல், பூமியில் விழுவதில்லை.

பகவான் கிருஷ்ணருக்கு இரவு நிவேதிக்கப்படும் உணவு, ஒரு நாள் கூட விரயமாவதில்லை/மிச்சம் வருவதில்லை.

சிம்ம வாசல் வழி உள்ளே நுழைந்தவுடன், கடல் சப்தம் கேட்பதில்லை. மிகுந்த அமைதியாக இருக்கும். வெளியே கால் வைத்த அடுத்த நொடி கடலின் இரைச்சலை உணரலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


 சித்தன் அருள்....................தொடரும்!

சித்தன் அருள் - 934 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ பகவதி கோவில், குமாரநல்லூர், கோட்டயம், கேரளா!

$
0
0

பகவதி கோவில், குமாரநல்லூர், கோட்டயத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

சேரமான் பெருமாள், மன்னனாக கேரளத்தை ஆண்டு வந்த காலத்தில், இரு கோவில்களை ஒரே நேரத்தில் கட்டி, குடமுழுக்கு செய்ய விரும்பினார். ஒன்று உதயனாபுரம் என்கிற இடத்திலும், இன்னொன்று திங்கள்கடவு என்கிற இடத்திலும். திங்கள்கடவில், சுப்பிரமணிய பெருமானை பிரதிஷ்டை செய்ய விரும்பி வேலைகள் ஜரூராக நடந்தது.

அதே நேரத்தில், மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். அங்கு உறையும் மீனாக்ஷி அம்மையின், மூக்குத்தி, காணாமல் போனது. இதை அறிந்த மன்னன், தலைமை பூசாரியை விசாரித்த பொழுது, எந்த விதமான பதிலும் கூற முடியவில்லை. அவர் திணறினார்.

பாண்டிய மன்னன், தலைமை பூசாரி 41 நாட்களுக்குள் மீனாக்ஷியின் மூக்குத்தியை கண்டு பிடித்து ஒப்படைக்கவில்லை எனில், 42வது நாள், மரண தண்டனையை ஏற்க வேண்டிவரும் என கட்டளையிட்டான்.

40 நாட்களும் ஒன்றும் கிடைக்கவில்லை. அன்றைய இரவு. உறங்கிக் கிடந்த தலைமை பூசாரியை, ஒரு வெளிச்சம் வந்து தட்டி எழுப்பி, "என்னுடன் வா", என கட்டளையிட்டது.

நடக்கத் தொடங்கிய பூசாரி, வெளிச்சத்துக்குள் நுழைந்தது தான் தெரியும். அடுத்த நொடியில், திங்கள்கடவில், கோவில் வேலை முற்று பெரும் நிலையில் இருந்த கோவில் முன் இருந்தார்.

அழைத்து வந்த வெளிச்சம் அசரீரி வாக்காக பூஜாரிக்கு கட்டளையிட்டது.

"மீனாக்ஷியாக யாம் இங்கு இருக்கப்போகிறோம். பிரதிஷ்டைக்கான நல்ல நேரம் நெருங்கிவிட்டது என மன்னனிடம் கூறுக"என்றது.

இதை கேள்விப்பட்ட அரசன் சேரமான் பெருமாள் குழம்பிப்போனான். எங்கே சுப்ரமண்யரை பிரதிஷ்டை செய்ய விரும்பினோமோ, அங்கே மீனாக்ஷி ப்ரதிஷ்டைக்கு உத்தரவிடுகிறாளே, என நினைத்து, தான் உருவாக்கிய துர்கை அம்பாளின் சிலையை சிலையோடு கோவிலை நெருங்கினான்.

உடனேயே, கோவில் சன்னதியிலிருந்து "குமாரன் அல்லா ஊரில்"இது "குமாரியின் ஊர்! ஆகவே  வேதபுரி மலையில் இருக்கும், சிலையை இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்க"என்று உத்தரவு வந்தது. மன்னன், ஆட்களை அனுப்பி சிலையை கொண்டு வந்ததும், மீனாட்சியின் உத்தரவின் பேரில், பரசுராமர் ஒரு வயதான பிராமண உருவத்தில் வந்து பிரதிஷ்டை செய்துவிட்டு, பின்னர் மறைந்து போனார். இதனால், திங்கள்கடவு அன்று முதல்"குமாரநல்லூர்"என்றழைக்கப்பட்டது.

மனம் வருந்திய மன்னன்,  சுப்பிரமணியர் விக்கிரகத்தை, உதயனாபுரத்தில் பிரதிஷ்டை செய்ததுடன், தன் விருப்பப்படி நடக்காததால், குமாரநல்லூர் கோவிலுக்கான உதவிகளை நிறுத்திக் கொண்டான்.

அன்றைய காலகட்டத்தில், மன்னர் படை சூழ நதியில், பயணம் செய்வார்கள். இப்படி ஒருமுறை பயணம் செய்த பொழுது, திடீர் என படகை பனி சூழ்ந்து, யாருக்கும் கண் தெரியாமல் போனது. பயந்து போன மன்னன், மந்திரியாரிடம் வினவ, அவரும் "குமாரநல்லூர் கோவிலுக்கான உதவியை நிறுத்தியதே காரணம் என்றும், அதை செய்வதாக இப்பொழுதே உறுதியளித்தால், அனைவரும் நலமாக கரைசேரலாம்"என்றார்.

சேரமான் பெருமாள், நதியிலிருந்து நீர் எடுத்து, அர்க்கியம் விட்டு சத்தியம் உரைக்க, வளையல் இட்ட கை ஒன்று, நீரிலிருந்து வெளிப்பட்டு அதை ஏற்றுக் கொண்டது.

மதுரையிலிருந்த வந்த பூசாரியையே இந்த கோவிலுக்கு பூஜாரியாக நியமித்தான். அவரின் சந்ததிகளே இன்றும், அம்பாளுக்கு பூசை செய்து வருகின்றனர்.

சரி! நாம் தெரிந்துகொள்ள இங்கு என்ன உள்ளது!

இந்த கோவிலின் பிரகாரமும், சன்னதியும், ஸ்ரீசக்ர வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஒருமுறை சென்று வந்தாலே, ஸ்ரீ சக்கரத்துக்குள், புகுந்து, அம்பாள் அருளுடன் வெளி வந்ததுபோல், ஒரு உணர்வு ஏற்படும்.

கோவிலின் மதில்களில், இயற்கை செடியால் வரையப்பட்ட ஓவியங்கள், தரிசிப்பவர் அனைவரையும் கவர்ந்திழுக்கும்.

இந்த கோவிலில் கொண்டாடப்படுகிற "கார்த்திகை தீபம்"  அனைவரும் காண வேண்டிய ஒன்று.

அம்பாளின் உத்தரவின் பேரில், கல்விக்கூடங்கள் நிறுவி, இன்றும் கல்வி புகட்டி வருகிறார்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


சித்தன் அருள்..............தொடரும்!
 

சித்தன் அருள் - 936 - ஆலயங்களும் விநோதமும் - காமாக்ஷி கோவில், காஞ்சிபுரம்!

$
0
0

காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். "காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி"என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும். இக்கோயிலில் காமாட்சி அம்மன், இரண்டு காலையும் மடித்து, பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார். தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் முதுகு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது.

முன்னொரு காலத்தில் கயிலை மலையில், தன் அன்புக்கு உரிய உமாதேவி ஒரு பாகத்தில் இருக்க, வேதங்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தார்.  அப்போது தேவி விளையாட்டாக ஈசன் பின்புறம் வந்து அவருடைய கண்களை, தன் இரு கரங்களால் பொத்தினார். இதனால் உலகம் இருண்டது.   இருளையே அறியாத தேவலோகம் ஒளி இழந்தது.  எங்கும் இருள் சூழ்ந்ததால் படைப்புத் தொழில்  நின்றது.  யாகங்கள் தடைப்பட்டன.  தவங்கள், தானங்களும் கைவிடப்பட்டன.  தெய்வ வழிபாடு  அறவே ஒழிந்தது.  உயிர்கள் மகிழ்ச்சி இல்லாமல் வருந்தின. அறிவு வளர்ச்சித் தடைப்பட்டது.   மறை நூல்கள் மறைந்தன.  இருளின் வயப்பட்டு உலகமெல்லாம் மயங்கி நின்றன.

தேவர்களும் முனிவர்களும் தம் காரியங்கள் தடைப்படவே, என்ன ஆகியதோ? என்ன ஆபத்து சூழ்ந்ததோ? எனப் பதை பதைத்து சப்தமிட்டனர்.  இக்குரல் அன்னையின் திருச்செவியில் ஒலித்தது.  உடன் அன்னை தன் திருக்கரங்களை இறைவன் திருக்கண்களிலிருந்து எடுத்தார். உடனே  இறைவன் திருக்கண்கள் இரண்டும் ஒளிவீசின, மீண்டும் உலகம் புத்தொளிப் பெற்றது.

சிவபெருமான் தேவியை நோக்கி, நீ எமது கண்களை மூடிய நொடிப் பொழுதில், உயிர்கள் வருந்தி அறங்கள் தடைப்பட்டு பாவம் சூழ்ந்தது.  அந்தப் பாவம் நீங்க, நீ பிராயச்சித்தம் செய்தாக வேண்டும் என்றார்.  அதற்கு வழியையும் கூறினார்.  தேவி, யாம் எழுந்தருளியிருக்கும் இடத்திலாவது, நம் அடியார் சிறப்புடன் வீற்றிருக்கும் இடத்திலாவது எம்மை வழிபடுவாயாக என்று அருளச் செய்தார். இறைவன் கூறியபடி அன்னை பிராயச்சித்தம் செய்வதற்குப் புறப்பட்டார்.

பாவம் சூழ்ந்த அன்னை, உக்கிர ரூபிணியாக பல இடங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து உத்தரவு கேட்டும் கிடைக்காமல், காஞ்சிபுரத்தில் ஏகாந்தமாய் அமர்ந்திருக்கும் "ஏகாம்பரேஸ்வரரை"தரிசித்ததும் அங்கேயே உத்தரவு கிடைத்தது. அங்கேயே தவநிலையில் அமர்ந்து, இறைவன் அருள மறுபடியும், சிவபெருமானை வந்தடைந்தார்.

சரி இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்தி ஆலயம், காமாட்சி அம்மன் கோயில் ஆகும், இது போல வேறிடங்களில் அம்மனுக்கு தனி ஆலயங்கள் இல்லை.

காமாட்சி இங்கு "பரப்ரஹ்ம ஸ்வரூபினி"என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால், 'உக்ர ஸ்வரூபினி'என அழைக்கப்பட்டார். ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.

ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்த ஆதி சங்கரர், தன்னிடம் கூறாமல் அன்னை வெளியே சென்று விடக்கூடாது என சத்தியம் வாங்கினார். ஆதலால், இன்றும் அன்னை கோவிலை விட்டு வெளியே வரும் முன், ஆதி சங்கரர் அமர்ந்து தவம் செய்த அறைக்கு முன் சில நொடிகள் நின்று விட்டுத்தான், வெளியே வருவாள். 

தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில் ’புத்திர காமேஷ்டி’ யாகம் செய்தார்.

காமாட்சியின் அம்மனின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அன்னை கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை உருவாக்கும்.

காஞ்சிபுரத்தில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள்  கோயிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம்  காலமாக இருந்து வருகிறது.

காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில்  அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக  திகழுகிறாள்.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும்.

அம்மனுக்கு  முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. அது காணவேண்டிய ஒரு காட்சி.

இத்தலத்தில் தான் ஆதிசங்கரர்  ஆனந்தலஹரி பாடினார்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............ தொடரும்!

சித்தன் அருள் - 937 - ஆலயங்களும் விநோதமும் - வசிஷ்டேஸ்வர் கோவில், தென்குடித்திட்டை, தஞ்சாவூர்!

$
0
0

வசிஷ்டேஸ்வர் கோயில், தென்குடித்திட்டை, தஞ்சாவூருக்கு வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் திட்டை அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

திட்டை எனும் சொல் மேடு எனவும் பொருள்படும். பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்ட போது, திட்டை மற்றும் சீர்காழி ஆகிய சிவதலங்கள் பாதிக்கப்படவில்லை. உலகப் பிரளய காலத்தில் இப்பகுதிகள் திட்டாகத் தோன்றியபடியால் சீர்காழியை வட திட்டை எனவும், வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியை தென் திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள். இறைவன் சுயமாக வெளிப்பட்டு அருள் புரிந்தார்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

  • அம்மன் சந்நிதிக்கு முன்பாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும், ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • குரு பகவானிற்கு தெற்கு நோக்கி தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.கிரகங்களில் வியாழ பகவானுக்கு சிறந்த பரிகார ஸ்தலம்.
  • இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவதுவாக சுயம்பு லிங்கமாக காணப்படுகின்றார்.  ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை பஞ்சலிங்க ஷேத்திரம் என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சீபுரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டிவிடும். 
  • ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சூரியபகவான் ஒளி இந்த இறைவன் மீதுபடுகிறது.
  • இறைவன் மீது 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீர் விழுகிறது. இக்கோயிலில் சிவலிங்க வடிவில் உள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் சன்னதியில் உள்ள உட்புற கோபுரத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளத நம்பப்படுகின்றது. 24 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த சந்திர காந்தக் கல்லால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கல்லிலிருந்து ஒரு சொட்டு நீராய் இறைவன் வசிஷ்டேஸ்வரர் மீது விழுகிறதாக கூறப்படுகின்றது. சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிய சிவபெருமான் தன்னுடைய தலையில் சந்திரனை வைத்துக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக சந்திரன் இவ்வாறு 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை இந்த இறைவன் மீது விழுமாறு செய்கிறார் என தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


சித்தன் அருள்............. தொடரும்!

சித்தன் அருள் - 938 - ஆலயங்களும் விநோதமும் - கற்பக விநாயகர் கோவில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, தமிழ்நாடு!

$
0
0

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது.

இந்த பழமையான குடைவரைக் கோயில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும், குன்றக்குடி முருகன் கோயிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், மற்றும் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 47 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப் பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இக் கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 மீட்டர் உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது.

சரி! இங்கு நாம் தெரிந்து கொள்ள என்ன உள்ளது!

  • இங்கு பெருமானின் துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்திருப்பது.
  • சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.
  • அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.
  • வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம"ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்வது.
  • இடக்கரத்தை கடி ஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் தோன்றப் பொலிவது.
  • வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது.
  • ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது.
  • ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமையப்பெற்றுள்ளதால், இங்கு சன்னதியை வலம் வர இயலாது.பிள்ளையாரின் திரு உருவம் வடக்கு நோக்கியும், அவரின் தும்பிக்கை வலது புறமாக சுழித்தும் (வலம்புரி விநாயகர்) இருப்பது இக் கோயிலின் தனிச் சிறப்பாக உள்ளது.
  • ஒரு குடும்பம் உருவாகத் தேவையான, தடை விலகலை பிள்ளையார் பார்த்துக் கொள்கிறார். திருமணம் நடைபெற வைக்க "கார்த்தியாயினி"அம்மன் சன்னதியும், பிள்ளை வரமளிக்க "நாகலிங்கம்"சுவாமி சன்னதியும், அனைத்து செல்வ வளங்களை அளிக்கும் "பசுபதீசுவரர்"சன்னதியும் உள்ளது. இவர்கள் அனைவரையும் மேற்பார்வையிட்டபடி வடக்கு நோக்கி பிள்ளையார் அமர்ந்திருக்கிறார்.
  • எல்லா கோவில்களுக்கும் புஷ்கரணி  இருக்கும். இங்கு இருக்கும் குளம், கோவிலுக்கு முன்புறத்தில், பிள்ளையார் பார்வை படும் விதத்தில் அமைந்துள்ளது. பக்தர்களின் திருஷ்டி தோஷங்களை தன் நயனத்தினாலேயே விலக்கி, இக்குளத்தில் கரைப்பதாக ஐதீகம். தரிசனம், கைமேல், உடன் பலன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

சித்தன் அருள் - 939 - ஆலயங்களும் விநோதமும் - வடக்கும்நாதர் கோவில், திருசிவப்பேரூர் (திருச்சூர்), கேரளா!

$
0
0

மலைநாட்டில் "தென்கயிலாயம்"என அழைக்கப்பட்டதும், சிவபெருமானுக்கென்று, அவரே விரும்பி அமர்ந்த முதற்கோவில், வடக்கும்நாதர் க்ஷேத்ரம். இது, கேரளா மாநிலத்தில், திருச்சூர் என்கிற ஊரில் அமைந்துள்ளது. கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து சிவன் கோவில்களின் தலைமை பீடம் என்பார்கள். வடக்கும்நாதர் என்பது "விடை குன்று நாதர்"என்ற தமிழ்ப் பெயரிலிருந்து மருவியது என்பார்கள். இந்த கோவிலை, பரசுராமர் நிறுவினார்.

பரசுராமர், கர்த்த வீரியன் மகன்களை அழித்ததுடன் நிற்காமல் அரச குலத்தவர்கள் பலரையும் அழித்தார். அதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க நினைத்த பரசுராமர், சிவபெருமானுக்குப் பல கோவில்களை நிறுவ விரும்பினார். அதற்காகக் கடல் அரசனிடம் சென்ற அவர், சிவபெருமான் கோவில்களுக்காகப் புதிய இடத்தை உருவாக்க உதவும்படி வேண்டினார். கடல் அரசனும் அவர் வேண்டுகோளை ஏற்று, பரசுராமரின் கையிலிருந்து வீசியெறிந்த வேள்விக்கான அகப்பை விழுந்த இடம் வரைப் பின் வாங்கிப் புதிய நிலப்பரப்பை உருவாக்கிக் கொடுத்தார்.

புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில், சிவபெருமானுக்கு முதல் கோவில் அமைக்க விரும்பினார் பரசுராமர். அதன்படி வடக்குப் பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோவில் அமைத்தார். சிவபெருமான், தன்னுடைய சிவ கணங்களில் ஒன்றான சிம்மோதரன் என்பவனை, கோவிலுக்குள் நடைபெற்று வரும் பணிகளை கவனித்து வரும்படி அனுப்பினார்.

ஆனால் போனவன் வரவில்லை.  நீண்ட நேரமாகியும் சிம்மோதரன் வராததால், உள்ளே சென்றார் சிவபெருமான். தன்னிலை மறைந்திருந்த சிம்மோதரனை தன் காலால் உதைத்தார். அதன் பிறகு அங்கிருந்த தூணில் ஒளிமயமாகி நின்றார்.

கோவில் பணி நிறைவடையாத நிலையில், இறைவன் கோவிலுக்குள் வந்து விட்டதை உணர்ந்த பரசுராமர், இறைவனின் கோபத்தைக் குறைப்பதற்காக அவரை நெய் கொண்டு குளிர்வித்தார். இதனால், இறைவனின் உருவம் நெய்லிங்கமாக மாறியது. 12 அடி உயரம், 25 அடி அகலம் எனும் அளவில் அமைந்த இந்த லிங்கம் முழுவதும் நெய்யால் பொதிந்திருக்கும். ஆதலால், இந்தக் கோவில் இறைவனை ‘நெய்லிங்கம்’ என்று சிறப்புப் பெயரால் அழைக்கின்றனர்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

  • மூலவருக்கு நெய்  கொண்டுதான் அபிஷேகம் செய்கின்றனர். சில வேளைகளில் பன்னீர், சந்தனம் அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. கோடைக்காலத்தின் வெப்பமோ, மூலவருக்குக் காட்டப்படும் தீப ஆராதனையில் இருந்து வரும் வெப்பமோ இந்த நெய்யை உருகச் செய்வதில்லை. இருப்பினும், இந்த நெய் லிங்கத்தைப் பாதுகாப்பதற்காகப் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.
  • சிவபெருமான் மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார். பின்புறம் அமைந்திருக்கும் சன்னிதியில் பார்வதிதேவி கிழக்கு நோக்கியபடி வீற்றிருக்கிறார். கோவில் வளாகத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ராமர், சங்கரநாராயணர், கணபதி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. இந்த ஐந்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரியாக பூஜை நடத்தப்படுகிறது என்பது தனிச்சிறப்பாகும்.
  • இங்கு மூலவராக இருக்கும் லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை வாங்கிச் சாப்பிட்டால், நாள்பட்ட நோய்கள் தீரும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.
  • சிவபெருமான் கோவில்களில் பொதுவாக நந்தி எதிர்புறம் மூலவரை நோக்கியபடி அமைந்திருக்கும். ஆனால், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் நந்தி எதிர்புறம் இல்லாமல், விலகி தனி மண்டபத்தில் இருக்கிறது. பிரதோஷக் காலங்களில் மட்டும் சிவபெருமான் இந்த மண்டபத்தில் எழுந்தருளி, நந்தியுடன் பக்தர்களுக்கு அருளும் நிகழ்வுகள் நடத்தப்பெறுகின்றன.
  • வடக்குநாதர் கோவில் அமைந்திருக்கும் தேக்கின்காடு பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ நடத்தப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு எதிரில் உள்ள பாரமேக்காவு பகவதி, திருவெம்பாடி பகவதி ஆகியோர் வடக்குநாதரைப் பார்க்கும் பூரம் நாள் தான் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ என்கின்றனர். இந்தத் திருவிழாவின் போது, இந்த ஊரிலுள்ள நான்கு அம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் யானைகள், அணிவகுத்து நிற்பது சிறப்பாக இருக்கும். இவ் விழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எதிர் எதிர் திசைகளில் நின்று முத்துக்குடை பரிமாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
  • இந்தக் கோவிலுக்கு முதன் முதலாக வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள வியாசமலையில் ‘ஹரி ஸ்ரீகணபதியே நமஹ’ என்று தங்களது விரல்களால் எழுதி வேண்டிக் கொண்டால், அடுத்த முறை இந்த ஆலயத்திற்கு வரும்போது, தன்னுடைய வாழ்வில் உயர்ந்த நிலையை பெற்றிருப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது. 
  • குழந்தைப்பேறு இல்லாமலிருந்த சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதியர் இங்கிருக்கும் இறைவனை வேண்டித்தான், ஆதிசங்கரரைத் தங்களது மகனாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மேற்கு திசையில் கோபுரத்திற்கு அருகில் இருக்கும் சதுர வடிவ கல்லின் பெயர் கலிக்கல். அதை நான்கு புறமும் மேடைகட்டி காத்து வருகிறார்கள். கோவில் தரிசனம் முடிந்த பிறகு பிரசாதம் சிறிது எறிந்து கலி முற்ற முற்ற இந்தக்கல், கொடிக்கம்பம் வரை வளர்ந்து விடாமல் தடுக்கிறார்கள் என்பது ஐதீகம்.
  • ஆதிசங்கரரின் அதிஷ்டான இடமும் அதற்கான் ஆலயமும் இருக்கும் இடத்திற்கு சங்கு சக்கரம் என்று பெயர். அனுமன் சஞ்சீவிமலையை எடுத்துவரும்போது சில மூலிகைகள் வெளிப்பிரகாரத்தில் விழுந்து சிதறியதாம். ஆதலால், 
  • இந்த இடத்திலிருந்து சிறு புல்லாவது பிடுங்கி கொண்டு போய் பக்தர்கள் தங்கள் இலத்தில் பத்திரப் படுத்துகிறார்கள்.
  • ஈரேழு பதினான்கு லோகத்தின் அதிபதி "வடக்கும்நாதர்"என்பதால் எது வேண்டினாலும் நடக்கிறது.
  • வடக்கும்நாதரை தரிசித்தால் காசிக்கு சென்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம்
  • இவரது கோபத்தைத் தணிக்கவே நெய்யினாலேயே அபிஷேகம் செய்கிறார்கள். சலவைக்கல் போல் காணப்படும் லிங்கம் எத்தன டிகிரி வெப்பமானாலும் உருகுவதில்லை.
  • மூலவருக்கு இரவு 8.00 மணிக்கு நடைபெறும் திருப்புகா பூஜை தொடர்ந்து 41 நாட்கள் பார்த்தால் தாம் நினைத்த காரியம் கை கூடும் என்பது நம்பிக்கை. இந்த பூஜையின் போது பல தேவர்கள் வருவதால் பக்தர்கள் நடுவில் வெளியேற அனுமதி இல்லை. பூஜை முடிந்தபிறகே வெளியில் வர முடியும்.
  • 12 அடி உயரம், 25 அடி அகலம் உள்ள மிகப்பழமையான நெய்லிங்கம் எப்போதும் உருகாமல், பாறை போல் இறுகி உள்ளது.
  • எப்போதாவது நெய் வெளிப்பட்டால், உடனே உருகி காணாமல் போய்விடுகிறது.
  • மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்து வருகின்றனர். நெய் கட்டியாக உறைந்து வரும்.
  • கோடையின் வெப்பமோ, ஆரத்தி வெப்பமோ, சூடோ இந்த நெய்யை உருகி விழச்செய்யாது.
  • பூச்சிகள் மூலவரை தாக்காது.
  • மூலவர் மீது உள்ள நெய் மணம் கிடையாது.
  • நெய் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் , பன்னீர், சந்தன அபிஷேகம் செய்தாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.
  • லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.
  • தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கிடைக்க பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள்.
  • அந்த பாம்பு கர்ப்பகிரகத்தின் வாசலில் மணியாக இருப்பதாக ஐதீகம். பிரதோஷ காலங்களில் இந்த மணியை தலைமை நம்பூதிரி மட்டுமே அடிப்பார். மற்றவர்கள் தொட அனுமதியில்லை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

சித்தன் அருள் - 939 - மாப்பிள்ளை சுவாமி கோவில், திருவீழிமிழலை, திருவாரூர்!

$
0
0

இத்தலத்தில் சிவபெருமான் மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இறைவன், மாப்பிள்ளை கோலத்தில் காசியாத்திரைக்கு செல்வதுபோல் உள்ளதால், மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

சிவபெருமான் இங்கு ஸ்வயம்பு மூர்த்தியாக உரைகின்றார்.

இங்கு உள்ள பாதாள நந்தி பிரசித்தமானது. நந்தியம்பெருமானே முழு கோவிலையும் தங்குவதாக ஐதீகம்.

பெருமாள் சக்ராயுதத்தை திரும்ப பெற வேண்டி, சிவபெருமானுக்கு பூசை செய்ய, சரியாக ஒரு பூ குறைந்ததால், தன் ஒரு கண்ணை எடுத்து பூசையை நிறைவேற்றினார்.

சிவபெருமானுக்கு முன்பாக, நந்தியம்பெருமானுக்கு பதில், பெருமாள், ஒரு கையில் பூவுடன், ஒரு கையில் கண்ணுடன் நிற்பது வித்யாசமாக இருக்கும்.

கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது வித்யாசமாக இருக்கும்.

இங்கு உற்சவ மூர்த்தி, சக்கரத்தை கையில் ஏந்தி நிற்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக இத்திருக்கோயிலின் கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.

இவ்வூரில் பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயிலில் படிக்காசு பெற்று மக்களின் பசியைப் போக்கிவந்ததாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.

இறைவனாரிடமிருந்து பெற்ற படிக்காசுகளை மாற்றிப் பொருள் பெற்ற கடைத்தெரு ஐயன்பேட்டை என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. இங்கே படியளந்த நாயகி உடனாய செட்டியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்! 

சித்தன் அருள் - 940 - ஆலயங்களும் விநோதமும் - பச்சோட்டு ஆவுடையார் கோயில், மடவிளாகம், காங்கேயம், தமிழ்நாடு!

$
0
0

அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் கோவில், ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில், மடவிளாகம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

முன்னொரு காலத்தில் அன்னை பார்வதி ஈசனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள். சிவபெருமான், பச்சை மண்ணால் செய்யப்பட்ட திருவோட்டுடன், பிச்சையேற்பவராக அன்னைக்கு காட்சி கொடுத்தார். அடியவர்களுக்கு அன்னமிடுவதை தனது முதல் கடமையாக கொண்ட பார்வதி, சிவனுக்கு அன்னமிட்டார். இதனால் மகிழ்ந்த சிவன் பார்வதிக்கு காட்சி கொடுத்து தன்னுடன் அழைத்து சென்றார் என்பது இத்தல புராண வரலாறாகும்.
1000 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது. பச்சை ஓட்டுடன் சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் 'பச்சோட்டு ஆவுடையார்"என அழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுக்களில் 'பச்சோட்டு ஆளுடையார்"என காணப்படுகிறது. தலத்தின் நாயகி பச்சை நாயகி, பெரியநாயகி என்ற திருப்பெயர் தாங்கியுள்ளாள்.   

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது?

  • இரண்டு சுயம்பு மூர்த்திகள் உள்ள மிகப்பெரிய சிவன் தலம் இதுவாகும். இந்த பகுதியிலேயே மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ள திருத்தலம். 
  • கோயிலின் பின்புறம் சிவன், தனது நகத்தால் நிலத்தில் கீறின பொழுது உருவான அற்புத சுனை உள்ளது. 'நிகபுஷ்கரணி"என்ற பெயர் பெற்ற இத்தலம் கங்கைக்கு சமமானது. 
  • 12 ஆண்டுக்கொரு முறை இங்குள்ள சுனையில், விபூதி நிரம்பிய மண் கலயம் மிதந்து வரும் அற்புத நிகழ்ச்சி நடந்து வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் 'குடம்"அளவுக்கு இருந்த இந்த மண் கலயம் நாளடைவில் சுருங்கி தற்போது 'சிறிய செம்பு"அளவில் மிதந்து வருகிறது. இந்த மண் கலய விபூதி கிடைப்பதற்கரிய மாபெரும் மருந்தாகும். இதை உடலில் பூசினாலும், சிறிதளவு சாப்பிட்டாலும் தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

சித்தன் அருள் - 941 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், உடுப்பி, கர்நாடகா!

$
0
0

உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.

விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.

தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் ’சந்திர புஷ்கரணி’. நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும் ஆனது.

உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.

புதிய சுவாமி மடத்தின் பொறுப்பை ஏற்கும் விழா பர்யாய வைபவம் என்று கொண்டாடப்படுகின்றது. உடுப்பியில் மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படும் விழாவாக இது அமைகிறது. இவ்விழாவின் போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகுதான் கோயில் சமையலுக்குப் பயன்படுகின்றது.

முன்பு கனகதாசர் என்ற மகான் தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் உடுப்பி கோவிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி வழிபட்டுவந்தார். ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனகதாசருக்கு காட்சியளித்தார்.கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பலகணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது.

இந்த ஒன்பது துவாரங்கள் கொண்ட ஜன்னலில் தான் நவகிரகங்கள் இருப்பதாக ஐதீகம். ஆகவே வேறு தனி சன்னதி, நவகிரகங்களுக்கு கிடையாது.

கிருஷ்ணர் விக்ரகம், சாலிகிராமக்கல்லில், விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டு, ருக்மணி தேவியின் பூசையை ஏற்றுக்கொண்டது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............... தொடரும்!

சித்தன் அருள் - 942 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ சிவசைலநாதர் கோவில், சிவசைலம், அம்பாசமுத்திரம், தமிழ்நாடு!

$
0
0

சிவசைலநாதர் கோவில், சிவசைலம், அம்பாசமுத்திரம் ஊருக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு அமர்ந்துள்ள சிவபெருமானுக்கு, சிவசைலம் சொந்த ஊர். அவரது துணைவி பரமகல்யாணிக்கு பக்கத்தில் அமைந்துள்ள கீழ்ஆம்பூர், தாய் வீடு.

சரி இங்கு தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

பொதுவாக எல்லா கோவில்களிலும் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் திருமண வைபவம் நடக்கும். ஆனால் இந்த கோவிலில் மட்டும், மனிதர்களுக்கு நடப்பதுபோல், மறுவீடு சடங்கு நடத்தப்படுகிறது. திருமணம் முடிந்த பிறகு, ஸ்வாமியும் அம்பாளும், கீழ் ஆம்பூருக்கு பல்லக்கில் எழுந்தருளி, மூன்று நாட்கள் இருந்து, அனைவரையும் அருளியபின், சிவசைலத்துக்கு, ஊர்க்காரர்கள் செய்யும், சீர் மரியாதையை வாங்கிக்கொண்டு திரும்பி செல்வர். இதுபோல், இறை மூர்த்தங்கள், வேறு எங்கும் மறுவீடு செல்வதோ, ஊர்காரர்கள் சீர் மரியாதை செய்வதோ கிடையாது. அம்பாளை தங்கள் வீட்டு பெண்ணாகவும், சிவபெருமானை தங்கள் வீட்டு மாப்பிளையாகவும் ஊர்காரகள் பார்ப்பது வேறு எங்கும் கிடையாது.

அங்கு வசித்த அக்னிஹோத்ரி என்கிற தம்பதிகளுக்கு, சந்ததி இல்லாமல் போகவே, அம்பாள் கனவில் வந்து "கிணறு வெட்டுங்கள். அதில் கல்யாணியாக நான் கிடைப்பேன். அதை வைத்து பிரதிஷ்டை செய்யுங்கள்"என அம்பாள் கூறியதற்கு ஏற்ப, சிலை கிடைக்கவே, அதுவே கீழாம்பூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சிவசைலம் கோவிலில் 11 வது நாள் நடக்கும் தேரோட்டத்தில், அம்பாளின் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பர்.

இந்த கோவிலில், சிவன் சன்னதிக்கு முன்பில், ஒரு உரலும், உலக்கையும் வைக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகாதவர்கள் அதில் போடப்பட்டிருக்கும் மஞ்சளை இடித்து, பொடியாக்கி கொஞ்சம் பூசிக்கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

இப்பகுதியை ஆண்ட சுதர்சன பாண்டியன் என்கிற மன்னன், தினமும் இறைவனை தரிசிக்க வருவான். ஒருநாள் மன்னர் வராததை கண்ட, பூஜாரி, மன்னருக்கு அணிவிக்க வைத்திருந்த மாலையை அங்கு வந்து வேண்டிக்கொண்ட ஒரு பெண்மணிக்கு கொடுக்க, அவரும் கழுத்தில் அணிந்துகொண்டார். சோதனையாக அதன் பின்னர் மன்னர் தரிசனத்துக்கு வந்தார். அந்த பெண்மணியிடம் மன்றாடி அந்த மாலையை திருப்பி வாங்கி, மன்னர் வந்ததும் அவருக்கு அணிவித்தார் பூஜாரி. மன்னர் உற்று பார்த்த பொழுது, ஒரு நீண்ட முடி அந்த மாலையில் இருந்தது. இதைக்கண்ட மன்னர் கோபமுற்று பூஜாரியை வினவ, அவரும் அது சிவபெருமானின் சடையில் உள்ள முடி என்றுவிட்டார்.

அவ்வாறாயின் அதை உறுதி செய்ய கர்பகிரகத்துக்கு வெளியே நின்று பார்க்க தீர்மானித்து, எல்லா பக்கத்திலிருந்தும், சுவரில் ஓட்டை போடச்சொன்னான். நேர்மையான பூஜாரியை காப்பாற்ற எண்ணிய சிவபெருமான், மன்னன் எந்த பக்கத்திலிருந்து நோக்கினும், சடை முடி தெரிய அமர்ந்திருந்தார். மன்னரும் அமைதியுற்றார். இன்றும் அந்த துவாரங்கள் வழியாக பார்த்தால், சன்னிதானத்தில் இறைவன் சடை முடியுடன் அமர்ந்திருப்பதை காணலாம்.

இன்றும் லிங்கம் ஜடாமுடியுடன் காட்சி தருவது மிகச் சிறப்பாக கருதப்படுகிறது.

இந்த கோவிலில் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் நந்தியானது, எழுந்து செல்ல தயாராக நிற்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முதலில், மிகுந்த உயிரோட்டமாக நந்தியின் சிலையை செய்த உடன், அது உயிர் பெற்று கிளம்ப முயற்சித்தது எனவும், உலகின் முதல் சிற்பியான மாயன் இதைக்கண்டு, தன கையிலிருந்த உளியை அதன் மீது எறிந்தார். முதுகில் உளிபட்டு, குறை ஏற்பட்டதால், அங்கு சிலையாகவே அமர்ந்ததாக கூறப்படுகிறது. இன்றும் நந்தியின் முதுகில் உளி பட்ட தழும்பை காணலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......................தொடரும்!

சித்தன் அருள் - 943 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ சரநாராயண பெருமாள், திருவதிகை, பண்ருட்டி, தமிழ்நாடு!

$
0
0

பண்ரூட்டியின் அருகில் சுமார் 3 km தொலைவில் உள்ளது, இந்த கோவில். பண்ருட்டியில் இருந்து பாலூர் வழியாக திருவந்திபுரம் பேருந்தில் ஏறினால் திருவதிகை அடையலாம் .

ஸ்ரீமந் நாராயணர் அவரிடம் சிவபெருமான் திரிபுரா அசுரர்களை அழிக்க உதவி செய்யுமாறு கேட்கிறார் அதற்கு நாராயணர் சிவபெருமானிடம் தேவர்களின் உதவியுடன் தேரை அமைத்து பிரம்மாவை தேரோட்டியாகவும், பூமியை ரதமாகவும், சூரியன் சந்திரரை சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரையாகவும் வைத்துக்கொண்டு, மேருமலையை வில்லாகவும் ஆதிசேஷனை நாணாகவும் செய்து யுத்தத்தை தொடங்குமாறு கூறினார். வில்லிற்கு தான் அம்பாக விளங்கி திரிபுரர்களை சம்ஹாரம் செய்வதாக கூறினார். ஆதலால் இத்திருத்தலத்தில் அவர் சரநாராயண பெருமாள் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் வீரட்டேஸ்வரர் கோயில் வைகாசி மாத திரிபுரர் எரிக்கும் விழாவில் நாராயணர் கருட வாகனத்தில் சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்ச்சை நடைபெறுகிறது.

சரி! ங்கு நாம் தெரிந்து கொள்ள என்ன உள்ளது!

  • 2000 வருட பழமையான கோயில்மற்ற கோயில்களில் கை கூப்பி நிற்கும் கருடாழ்வார் இந்தக்கோயிலில் கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் காட்சிதருகிறார்.
  • உப்பிலியப்பன் ஸ்ரீனிவாசனை போல் இங்குள்ள சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற கோலத்தில் காட்சிதருகிறார்.
  • மூலவர் சரநாராயண பெருமாள் முழுவதும் சாளக்ராமத்தால் ஆனவர்.
  • திரிபுர சம்ஹாரத்தில் சிவபெருமானுக்கு சரம் கொடுத்து உதவியதால் சரநாராயண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
  • இக்கோயிலில் சயன கோலத்தில் (படுத்திருக்கும்) நரசிம்மர் தாயாருடன் காட்சி தருகிறார்.
  • திருமாலின் திருக்கோயில்களில் இந்தக் கோயிலில் தான் நரசிம்மர் சயன கோலத்தில் தெற்கு நோக்கி சயனத்திருக்கிறார்.
  • 700 ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்த தேசிகர் இவரை வழிபட்டதாக கூறுகிறார்கள்.
  • இந்த சயனநரசிம்மர் திருவக்கரையில் வக்ரா சூரனை அழித்து விட்டு அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துளார்.
  • தாயாருடன் எழுந்தருளியதால் இது போகசயனம் ஆகும்.
  • சிவனுக்கு பிரதோஷம் நடைபெறுவது போல் இவருக்கும் பிரதோஷம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

சித்தன் அருள் - 944 - ஆலயங்களும் விநோதமும் - முருகர் கோவில், வில்லுடையான்பட்டி, நெய்வேலி!

$
0
0

தமிழகத்தில் அறுபடை வீடுகள் மட்டுமல்லாமல், எண்ணற்ற பல தலங்களிலும் முருகன் கோயில் கொண்டிருக்கிறார்.

முருகப் பெருமான் பெரும்பாலும் வேலுடன் வேலாயுதபாணியாகவும், தண்டத்துடன் தண்டாயுதபாணியாகவும் திருக்காட்சி தருவார். ஆனால், ஒரு தலத்தில் முருகப் பெருமான், வேடுவக் கோலத்தில் ஜடாமுடியுடனும், திருக்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தியவராகத் திருக்காட்சி தருகிறார்.

கடலூர் மாவட்டம், வடலூர் ரயில் நிலையத்துக்கு வடக்கில் சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் வேலுடையான்பட்டு என்ற தலத்தில் கோயில் கொண்டருளும் முருகக் கடவுள், வில்லேந்திய கோலத்தில், வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மூவரின் திருவுருவங்களும் ஒரே கல்லில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புராணக் காலத்தில் இந்தப் பகுதி அடர்ந்த வனமாக இருந்துள்ளது. முருகப் பெருமானின் தரிசனம் வேண்டி, முனிவர்களும் தேவர்களும் இந்தப் பகுதியில் நீண்ட தவம் மேற்கொண்டனர். அவர்களுடைய தவத்துக்கு இரங்கிய முருகப்பெருமான், முதலில் ஜோதியாகவும், பின்னர் வில்லும் அம்பும் ஏந்திய வேடுவராகவும் திருக்காட்சி அளித்தார். தரிசனம் தந்த முருகப் பெருமானுக்கு சிறப்பான ஆலயம் அமைத்து வழிபட்டனர். காலப் போக்கில் ஆலயம் மண்மேடிட்டு மறைந்துவிட்டது. 

கி.பி. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்ரகாடவன் என்ற பல்லவ வம்சத்து மன்னரின் பசுக்கள், இந்தப் பகுதியில் இருந்த காட்டுப் பகுதிக்கு மேயச் செல்வது வழக்கம். ஆனால், அரண்மனைக்குத் திரும்பியதும் பால் கொடுப்பதில்லை. மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒருநாள் மேயச் செல்லும் பசுக்களைத் தொடர்ந்து சென்றார். வனத்தில் ஒரு புதருக்கு அருகில் பசுக்கள் தானாக பாலைச் சொரிந்துகொண்டிருந்தது. மன்னன் வியப்புற்ற வனாக, அந்த இடத்தை மண்வெட்டியால் வெட்டினான். அப்போது ரத்தம் பெருகி வரவே திடுக்கிட்ட மன்னர், அந்த இடத்திலிருந்த புதரை மெள்ள மெள்ள அப்புறப்படுத்திவிட்டுப் பார்த்தபோது, மண்வெட்டி பட்டதால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் பெருகிய நிலையில் காட்சி தந்தார் முருகப் பெருமான். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், தமக்கு அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டும்படி உத்தரவிட்டார். அப்படி உருவானதுதான் வேலுடையான்பட்டு வில்லேந்திய வேலவனின் திருக்கோயில்.

  • மூலவர் மண்ணிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர்.
  • உற்சவர் கடலில் கிடைத்தவர். இங்குள்ள உற்சவர் சிலை, கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டு, கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப் பட்டது.
  • சுற்றிலுமுள்ள 18 கிராமங்களுக்கும் வேலுடையான்பட்டு வேலவன் குலதெய்வமாக இருந்து அருள்புரிந்து வருகிறார்.
  • கந்த சஷ்டியின்போது குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
  • கடன், நோய் போன்ற பல பிரச்னைகளையும் தீர்க்கும் பிரார்த்தனைக் கடவுளாக பக்தர்கள் போற்றுகிறார்கள்.
  • இந்த ஊரை சுற்றியுள்ள அனைத்து கோவில்/கிராமங்களில் இருந்தும். பங்குனி உத்திரத்தின் பொழுது, 108, 1008 என காவடி ஏந்திய பக்தர்கள், இந்த கோவிலுக்கு வருவது, பிரமிக்க வைக்கும் நிகழ்ச்சி.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................தொடரும்!
Viewing all 1968 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>