Quantcast
Channel: அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!
Viewing all articles
Browse latest Browse all 1974

சித்தன் அருள் - 155 - நம்பிமலை!

$
0
0

[வணக்கம்! அகத்தியர் அடியவர்களே! இன்று 22/12/2013, ஞாயிற்றுக்கிழமை நம் அகத்தியப் பெருமானின் ஜென்ம நட்சத்திரம், மார்கழி மாத ஆயில்யம். அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அவர் பாதத்தில் இந்த சித்தன் அருளை சமர்ப்பிக்கிறேன். அவர் சொன்னபடி நாம் அனைவரும் எளிய வாழ்க்கை வாழ்ந்து, அவர் அருளால், சித்தத் தன்மை அடைந்து கரை ஏறவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு ........... சித்தன் அருளை தொடருவோம், வாருங்கள்.]

"உங்கள் அனைவருக்கும் நிச்சயமாக தெய்வ தரிசனத்தை வாங்கித் தருவார். நிச்சயம். ஆனால் எப்போது என்று தெரியாது"என்றேன். 

மேலும் அகத்தியர் தொடர்ந்தார்.

"அது மட்டுமல்ல. இன்னும் நிறைய முனிவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களையும் உங்களுக்கு அடையாளம் காட்டித்தருவேன். அவர்கள் ஆசிகளையும் உங்களுக்கு பெற்றுத்தருவேன். இது சத்தியமான வாக்கு, இந்த நம்பிக்கோவிலில். அகத்தியனே இடுகின்ற அற்புதமான உத்தரவாதம் என்று சொல்லிக்கொள்ளலாம்"என்றார்.

"ஏற்கனவே, ஒருவன் கேட்டான், என் நிலைமை என்னவென்று! என் நிலைமை என்னவென்று வாய் திறந்து கேட்டால் தானே என்னவென்று கூறலாம். இவன் பூர்வ புண்ணியத்தில் மிகப் பெரிய ஜமீன்தாராக வாழ்ந்தவன் என்று சொன்னால் சந்தோஷப்படலாம். சேர்த்தவற்றை இழந்து விட்டு, உற்றார் உறவினருடன் பகையை முடித்துக் கொண்டு அத்தனையையும் இழந்து விட்டு, சொந்தக்காலில் நின்று கொண்டு வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டு இருக்கிறான். சித்தர்களின் பலம் இவனுக்கு பக்க பலமாய் இருப்பதினால்தான் கலை துறை சம்பத்தப் பட்ட தொழில் ஒன்றை நடத்திவிட்டு, அதன் மூலம் பெரும் வருவாயை பெற்றுக் கொண்டிருந்தாலும் கூட, இன்னும் அங்கோர் ஏற்ற நிலை, தாழ்ந்தநிலை இருக்கத்தான் செய்கிறது. முடிந்தால் ஒரு வளர்பிறை சதுர்த்தி அன்று, காலையில் ஆங்கொரு ஐங்கரன் வேள்விதனை, பின்பு தனாகர்ஷண, ஜனாகர்ஷன வேள்வி தனை செய்து அந்த செப்புத்தகட்டை கையில் வைத்துக் கொண்டால் போதும், நல்ல முன்னேற்றம் உண்டு. சுற்றுமுற்றும் உள்ள அத்தனை பேருக்கும் இவன் என்னதான் எளிமையாக காட்சி அளித்தாலும் கூட, இவனை பற்றி, பொறாமை கண்ணுடனேயே, உலா வந்து கொண்டிருக்கிற காலம். சொல்லத்தான் வேண்டும். யாரை எல்லாம் முழுமையாக நம்புகிறாயோ, அவர்களெல்லாம் உன்னை ஏமாற்றி விடக்கூடும். காலத்தின் கட்டாயம் அது. இவனுக்கு அங்கோர் குடும்பத்தில் சில வேண்டாத சம்பவங்கள் பல நடந்திருக்கிறது. பிறகு முன்னோர்களின் காலத்தில் கூட சில தேவை இல்லாத சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதன் காரணமாக ஒரு பற்றற்ற நிலைமைக்கு தன்னை ஆளாக்கி கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவனை நோக்கியே பயணம் கொண்டிருக்கிறான். ஆக, இறை பயணம் ஒன்று தான் இவனுக்கு ஆத்மா திருப்தியை தந்துகொண்டு இருக்கிறது. இல்லையென்றால், வாழ்க்கையை விட்டுவிட்டு எல்லாத்தையும் துறந்துவிட்டு எங்கோ போய்விடுவான். அப்படி பல முறை எண்ணங்களின் உச்சத்துக்குப் போய் அதிலிருந்து விழுந்து, இறை அடிமையாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறான். சித்தர்களுக்கு செய்கின்ற சேவையே தன் சேவை என்று, அதன் மூலம் தனக்கு ஏதேனும் புண்ணியம் கிடைக்குமா என்று தேடலுடன் வந்து கொண்டிருக்கிறான். புண்ணியத்தை தேடி வருகின்ற இவனுக்கு, எத்தனையோ மனப் புண்கள், மனதில் உண்டு, சொல்ல இயலாது. வெளியே சொன்னால், அதை ஏற்க மாட்டார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி, ஒரு விரக்தியின் உச்சத்தில் அல்ல, இறையாமையை நோக்கி வந்து கொண்டிருப்பதால் இவனுக்கு இன்னும் 13 நாட்களில் ஒரு விசித்திரமான சம்பவம் நடக்கும். அதற்கு பிறகு மனம் எல்லையற்ற சந்தோஷம் அடையும். எதிர்காலத்தில் இவன் ஒரு சித்தா ஆஸ்ரமம் போல கட்டுவான். ஏகப்பட்ட பேர்களுக்கு, தன்னாலான உதவிகளை செய்வான். அன்னதானம் பல செய்வான். சித்தர்கள் வந்து இவனை வாழ்த்த வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமல்ல, தன்னால், இந்த உலகத்துக்கு ஏதேனும் ஒரு நல்ல விஷயம் செய்யவேண்டும் என்று தோன்றி, அதற்கான வாய்ப்புகளும் கிடைத்து, நல்லபடியாக பயன்படுத்திக் கொள்வான். ஆகவே, எதிர்காலம் இவனை பொறுத்தவரையில், மிக சிறப்பாக இருக்கும். ஏற்கனவே, யான் சொன்னேன். இங்கு வந்து அகத்தியனை நோக்கி வந்ததற்கும் அகத்தியன் மலையில் காலடி எடுத்து வைத்ததர்க்கெல்லாம், எல்லாம் ஜெயமாகும். என்னுடைய மலை என்பதற்காக தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. சம உரிமை கோரவில்லை. என்னுடையது என்று வழக்கு போட முடியாது. இது என்னுடைய மலையாக இருந்தது. இந்தமலையில் தான், முதன் முதலாக அகத்தியன் யாகம் செய்தேன். யாகம் செய்த இடம் என்பதால், சொல்கிறேன். அப்படிப்பட்ட புண்ணியமான இடம் என்பதால், எல்லா தெய்வங்களும், முனிவர்களும், சித்தர்களும், முனி புங்கவர்களும் அமர்ந்து இருக்கின்ற அந்த புண்ணியமான நேரத்தில் நீ வந்திருக்கிறாய். யாருக்குமே கிடைக்காத பாக்கியம் என்று அகத்தியன் சொன்னால், அதற்கு ஒரு காரணம் இருக்கும். அதில் ஒரு சூட்சுமம் இருக்கும். எதற்காக சொல்லுகின்றேன் என்றால், இத்தனை கர்மங்களையும் தாண்டிவிட்டு, உன் மனம் எங்கு நோக்கி செல்லுகின்றது என்று எனக்கு தெரியும். எத்தனை பாடுபட்டிருப்பாய். எத்தனை தூரம் தூங்காமல் அழுதிருப்பாய். எத்தனை நாள், யார் யாரோ, கெடுதல் பண்ணியதை நினைத்து கலங்கி, மனதை புண்ணாக்கி, சாப்பிடாமல், தூங்காமல் வானத்தை நோக்கி விழித்துப் பார்த்திருப்பாய். அத்தனையும் எனக்கு தெரியுமாடா. அத்தனையும் தாண்டித்தான் உன்னை வரவழைத்த காரணம், உன் ஆத்மா பரிசுத்தமானது. எனவே அழகானது, ஆனந்தமானது. யாருக்கும் நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டேனே நான் என்று செய்து வந்த பணியை கூட இழந்திருக்கிறாய். நன்றி இன்றி நெஞ்சிலே குத்தியிருப்பார்கள். என்பதெல்லாம் கடந்த கால வரலாறு. சொன்னால் நம்புவார்களா. ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு அனைத்தையும் தாண்டி பக்குவமாக, அமைதியாக, ஆனந்தமாக ஒரு சாதாரண குடியானவன் போல் நிற்கிறாயே, இதிலிருந்து உன் அடக்கத்தன்மை எனக்கு புரியாதா? நீ இப்பொழுது முதல் புண்ணியவான். உன் எதிர்காலத்தை பற்றி நீ ஏன் கவலை படுகிறாய். அகத்தியனிடம் விட்டுவிடு. உன்னை நான் கரை சேர்க்கிறேன். பயப்படாதே."

"அடடா! அப்படியே உண்மை சாமி"என்றார் அந்த நண்பர்.

"என்ன?"என்றேன்.

"ஒரு வரி கூட தப்பில்லை."என்றார்.

அகத்தியர் மேலும் தொடர்ந்தார்.  "அன்னவனை பற்றி சொல்ல வந்தால் 64 பக்கத்துக்கு ஏற்கனவே, இன்னொரு ஓலைச் சுவடியை எழுதி வைத்திருக்கிறேன். 64 பக்க ஓலைச்சுவடியில், வாழ்க்கை வரலாறு, முன்னோர்கள் வரலாறு, ஜாதகக் குறிப்பு அத்தனையுமே எழுதி வைத்திருக்கிறேன். ஆனாலும் இவர்களது குடும்பத்தில் மிகப் பெரிய தவறு நடந்திருக்கிறது. முன்னோர்கள் செய்த சில தவறு. அதனால், மொத்தமாக அத்தனையும் இழந்து பள்ளத்தில் விழுந்திருக்கிறான். விழுந்த பள்ளத்திலிருந்து எழுந்திருக்க முயற்சிக்கிறான், இவனால் என்ன செய்ய முடியும்? தனி ஒருவன். இவனுக்கு யாரும் இல்லை. பக்க பலமாய் இருந்து உதவி செய்ய யாரும் இல்லை. யாரையெல்லாம் கையைப் பிடிக்கிறானோ, அத்தனை பேரும் பாம்பாக மாறி கையைக் கொத்தினால் இவனால் என்ன செய்ய முடியும்? ஆகவே, இளமை, தலைமை என்பதை எல்லாம் தாண்டி, இப்பொழுது என்ன செய்யப் போகிறேன் என்ற கொதிப்பான கேள்விக்குறியிலேயே, ஏதேனும் ஒரு நல்வாக்கு அகத்தியனிடமிருந்து வராதா என்று ஆசைப் பட்டு ஓடி வந்தானே, அதையும் அகத்தியன் தெரிந்துதாண்டா சொல்கிறேன். உன் நிலையை அடைவதற்கு மூன்று நிலை அடையவேண்டும். எதிர்ப்பு, ஏளனம், பிறகுதான் ஏற்றுக்கொள்ளப்படுதல். ஆக, ஏளனத்தோடு இருக்கிற நேரம் இது. சொத்திருந்தும், சுகமிருந்தும் அத்தனை பேரும் கண்கொத்திப் பாம்பாக இருந்து, அதை நோக்கித்தானே பயணம் செய்து கொண்டிருக்கிறானே தவிர, இவன் உண்மை நிலையை உணர்ந்து உதவி செய்ய யாரும் வரவில்லை. இன்னும் சொல்லப் போனால், ஆங்கொருநாள், ஆஸ்ரமத்தில் அமர்ந்து கொண்டு ஆங்கொரு மனித சித்தனை கண்டானே. அவனுக்கும், இவனுக்கும் அதிக வித்யாசம் இல்லை. 

அவன் மலையிலே வாழ்ந்துவிட்டு பல காலம் சித்தனாக இருந்ததால், அவனுக்கு விநாயகசித்தன் என்று பெயர். யாருக்குமே தெரியாது. விநாயகனை வணங்கி வருவதால் மட்டுமல்ல. பலமுறை அவனுக்கு வினாயகரே காட்சி கொடுத்திருக்கிறார். தெய்வத்தன்மை பொருந்தியவன் என்பதால்தான் அவன் எதுவுமே சொல்லமாட்டான். சித்தர்கள் வழக்கமே அப்படித்தானே. புன்னகை பூக்கும்போதே அகத்தியனுக்கு புரிந்தது. அவன் எப்படிப்பட்டவன், என்ன அழகாக வேஷம் போடுகிறான் என்று. ஆக, தன்னைத்தானே அடக்கிக்கொண்டு அழகாக நாடகம் நடிக்கிறான். அற்புதமான மனிதசித்தன். மலையிலே வாழ்க்கையிலே, அவனுக்கு எத்தனையோ சோகங்கள் ஏற்பட்டிருக்கிறது. அந்த சோகங்கள் இங்கு யாருக்குமே தெரியாது. அகத்தியன் ஒருவனுக்குத்தான் தெரியும். வாழ்க்கையில் எதையெல்லாம் அனுபவித்து வாழ வேண்டும் என ஆசைப்பட்டானோ, அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, துறவறத்தின் உச்சகட்டத்தை அடைந்து சித்தத்தன்மை அடைந்திருக்கிறானே. அந்த விநாயக சித்தன் சாதாரண சித்தன் அல்ல. அவன் எல்லாவற்றையும் துறந்துவிட்டு பச்சை புடவை அணிந்துகொண்டு அமர்ந்திருக்கிறான். பச்சை புடவை சித்தன் என்று ஒரு காலத்தில் பின்னால் வரும். அவனுக்கும், இவனுக்கும் அதிக வித்யாசமில்லை. ஏன் என்றால், அவன் எல்லாவற்றையும் துறந்துவிட்டு உட்கார்ந்திருக்கிறான். இவன் எல்லாமும் இருந்தும் துறந்திருக்கிறான். அதுதான் உண்மையடா."

"அவரை காலங்கி சித்தன் என்று சொல்வார்கள். அவர் ஒண்ணுமே சொல்லமாட்டாரு"என்றார் அந்த நண்பர்.

"ஆமாம்! அவர் ஒண்ணுமே சொல்லமாட்டாரு"என்றேன் நான்.

"இல்ல சாமி! எதிர்பார்க்காம நமக்கு தரிசனம் கிடைக்கிறதே! அது எதனால் சாமி!"என்றார் அவர்.

"அது புண்ணியம். அதான் சார்! ஏதோ ஒரு லிங்க் இல்லாம நீங்க வரமாட்டீங்களே"என்றேன்.

"எத்தனையோ சாமிங்கள பார்த்திருக்கோம். உதாரணமாக இப்ப உங்களையும் பார்த்திருக்கோம்"என்றார்.

"போதுமடா சாமி! என்னையும் அந்த லிஸ்ட்ல சேக்காதீங்க. விட்டுடுங்க. அவர சொல்லுங்க. அது நியாயம். 70 வருடங்களாக தவமிருந்து வாழ்ந்தவர். நான் எல்லாம் மிக மிக, என்ன சொல்ல, சாதாரணமான மனுஷன் நான்"என்றேன். அது தான் உண்மையும் கூட.

"மௌன சாமின்னு ஒருத்தர் ஆஸ்ரமம் வெச்சிருந்தார்"என்றார்.

"அவங்களெல்லாம் அதற்குன்னு வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் சார்! இங்கு நான் அப்படி இல்லை. இந்த ஓலைக் கட்டை 50 வருடமாக படிக்கிறேனே தவிர, வருவதை  சொல்லறாரு கேட்டுக்கிறேன். அவரே சில சமயம் குட்டுகிறார், வாங்கிக்கிறேன். நானும் உங்கள மாதிரித்தான். தெரியாத்தனமா அங்க உட்காருவதற்கு பதிலாக இங்கு உட்கார்ந்திருக்கிறேன்"என்றேன்.

"வேறு ஏதாவது கேட்கணமா? என்றேன்.

"13 நாளுனு சொன்னாரே. என்ன விஷயம்?"

"ஏதாவது எதிர்பார்த்து இருந்திருப்பீர்கள். நல்ல செய்தி காதில் விழும்"என்றேன்.

அகத்தியரை பற்றி மகான் புத்தியர் இயற்றிய செய்யுள்!

குருவடி பெற்றாள் சரண் சரணம்
கும்ப முனியே  சரண் சரணம்
திருவடி நாதா சரண் சரணம்
சித்தர்களின் அருளே சரண் சரணம்
அருள் வடிவானாய் சரண் சரணம்
அமரர்களே கோவே சரண் சரணம்
பொருளடி மூலங் காட்டிஇற்று போதித்த குருவே சரண் சரணம்
போதித்த குருவே சரண் சரணம் பொதிகைவளர் அம்பலர் சரண் சரணம்
வேதித்தெனையே ஆட்கொண்ட விமலா சரணம் 
மெய்ஞானம் சாதித்த தேவே சரண் சரணம்
சமுசயந் தீர்த்தாய் சரண் சரணம் 
ஓதித்தருள்வாய் சரண் சரணம்
உண்மைப் பொருளே சரண் சரணம்

மகான் புத்தியர்

சித்தன் அருள் ............. தொடரும்!

Viewing all articles
Browse latest Browse all 1974

Latest Images

Trending Articles


71வது சுதந்திர தினம் நற்பண்புகளால் இந்திய நாட்டை கட்டி எழுப்புவோம் : கவர்னர்,...


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினான்கு - ஆதி வெங்கட்


வேதம் புதிது - கபிலரும் பாரதிராஜாவும்


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 204 - அகத்தியர் அறிவுரை - 20


ஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ்


படர்ந்தபடி யோசித்தல் –குழந்தைகளுக்காக


பெருங்கதை


Kamal: கமலுடன் போட்டோ வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்: ரசிகர்கள் எதை ஜூம் செஞ்சு...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>