[நம்பிமலை - மலை பாதை]
"பதிமூணு நாள்னு சொல்லிட்டாரு."என்ற படியே நாடியை புரட்டினேன்.
"இரவு காலத்திலும், அந்திம பொழுதிலும். சுப காரியங்களை பேசுவது அகத்தியன் வழக்கமல்ல"என்றார்.
"ராத்திரி நேரத்தில் வேண்டாம். சுப காரியங்களை விலக்குவோம். இது ராகு, கேது மிக பலம் பொருந்தி இருக்கிற இடம், நேரம்."என்றேன்.
மேலும் ஒருவர் கேட்டார்.
"எனக்கு உடம்பில் ஒரு சில கட்டிகள் இருக்கு. அதற்கு மருந்து, முன்னரே சொன்ன மருத்துவ வழிகளில் கிடைக்குமா?"என்றார்.
"அதை எல்லாம் குணப்படுத்தத்தாண்டா, அகத்தியனே, போகனுடன் இங்கு வந்திருக்கிறேன். அந்த கட்டிகள் வந்ததற்கு, காரணம் பல உண்டு. குடும்பத்தில் உனக்கு மட்டுமல்ல, உன் முன்னோர்கள் ஒரு சிலருக்கும், இந்த குறை உண்டு."என்றார் அகத்தியர்.
"அப்படியா? உங்க குடும்பத்தில் பெரியவர்கள் யாருக்காவது இப்படி கட்டி உண்டா?"என்றேன்.
"இருப்பினும், அதற்கு ஒரு காலம் உண்டு என்று சொல்லி உன்னை அகத்தியன் கை கழுவ மாட்டேன். உன் நோய் மிக விரைவில் குணமடையும். இது ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளாக உடம்பிலே ஒட்டிக்கொண்டிருக்கிறது."
"உண்மை தானா?"என்றேன்.
"ஆமாம்!"என்றார் அவர்.
"ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் 2012ம் ஆண்டு முடிவில் உலகம் அழியும் என்று காட்டினார்கள். அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறதா?"என்றார் ஒருவர்.
"அகத்தியன் வாயை ஏண்டா கிளறுகிறாய். சில விஷயங்களை சொல்லக்கூடாது என்று மறைத்து வைத்துக் கொண்டிருந்தேன். ஒரு சூட்சுமம் மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவர்களுக்கு உலகத்தை கணக்கிட அதிகாரம் கிடையாது. மனிதர்கள் கிரகங்களை வற்புறுத்த முடியாது. கிரகங்கள் ஒன்று பட்டால் தான், வெகுண்டு எழுந்தால் தான் உலகம் அழியும். என்றைக்கு ஒருநாள் மங்கோலிய தேசத்து நாட்டரசன் ஆங்கொரு விண்கலத்தை காரியை நோக்கி செலுத்த நினைக்கிறானோ, அன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள், பசிபிக் மகா சமுத்திரத்திலே, ஆங்கோர் சுனாமி வெடிக்கும், அது உலகத்தின் பெரும் பகுதியை அழிக்கும். அதுதான் உண்மை. இவர்கள் சொல்கிற கூற்றை அகத்தியன் ஏற்பதற்கில்லை."
"சீனாவிலிருந்து ராக்கட் விடுவதையா கூறுகிறார்?"
"சைனாவிலிருந்து காரி என்று சொல்லக்கூடிய, சனி கிரகத்துக்கு 5 ஆண்டுகளில் ஒரு ராக்கட் விடுவான். அப்படி விட்ட 5 ஆண்டுகளில் பசபிக் மஹா சமுத்திரத்திலிருந்து ஒரு சுனாமி கிளம்பும். அது பாதி உலகத்தை அழிக்கும். அது தான் உண்மை. மேற்கொண்டு என் வாயை கிளறாதே என்று சொல்லிவிட்டார்"என்றேன்.
"உண்மையாகவே, உலகத்துக்காக, இந்த கேள்வியை நாளை கேட்கலாம் என்று இருந்தேன். இருந்தாலும் கேட்டுவிடலாமே என்று கேட்டேன்"என்றார் அவர்.
"நாளைக்கு கேள்வி, நாளைக்கு. இது அந்திம பொழுது. ராகு, கேதுவின் பலம் வாய்ந்த நேரம். எதுவும் கேட்க்காதே என்கிறார்."என்றேன்.
"கெட்ட எண்ணங்கள், துஷ்ட சக்திகள் போன்றவை இந்த நேரத்தில் வேண்டாம். ஏன் நல்ல விஷயங்கள் ஆன திருமணம் போன்ற விஷயங்களும் இந்த அந்திம நேரத்தில் பேச வேண்டாம் என்கிறார்"என்றேன்.
"எனக்கு, மூலிகைகள் சம்பந்தப்பட்ட, தோட்டம் போன்றவை வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அது நிறைவேறுமா?"என்றார் ஒருவர்.
"அது மட்டுமா இவனுக்கு ஆசை? உலகத்தைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும், பல காலமாகவே சிந்திக்க தொடங்கி இருக்கிறானே. அவ்வப்போது, அது வேண்டும், இதுவேண்டும் என்று தன்னலம் கருதாமல், உலகத்துக்காக, ஏதேனும் ஒரு நல்ல காரியம் செய்யவேண்டும் என்று அகத்தியன் மைந்தனிடம் சொல்வானே. புதியதல்லவே! இது சின்ன ஆசை அல்ல, நியாயமான ஆசை. அதற்கான, வாய்ப்பை தர மிகப் பெரிய பணக்காரன் ஒருவன் வருவான். சில தோட்டங்களை பயிரிட வேண்டும் என்று இவனிடமே கேட்பான். இவன் மூலமாக கூட அந்த மூலிகை பண்ணை தயாராகும். பொறுத்திரு. அந்த நபரை அனுப்பி வைக்கிறேன். அவன் மூலம் இவன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்."
"யாரோ ஒரு பெரிய பணக்காரன் ஒருத்தன் வருவான் போலிருக்கு. அவன் மூலமாக இந்த விஷயம் நடக்கும்"என்றேன்.
"அக்கு பங்க்சர் சம்பந்தமாக ஒரு புத்தகம் வெளியிடலாம் என்று இருக்கிறேன். அதற்கு அருளாசி வேண்டும்"என்றார் ஒருவர்.
"தாராளமாக வெளியிடலாம். பத்திரிகையில் வருவது நல்லது தானே.அது வழி பலருக்கும் பயன்படுத்திக் கொள்வது நல்லதுதானே. தாராளமாக செய்யலாம்"என்றார் அகத்தியர்.
"எனக்கு செவ்வாய் தசை முடிந்து, ராகு மகா தசை தொடங்கி இருக்கிறது. அந்த தசை நல்ல படியாக இருக்கவேண்டும், அதற்கு ஆசி வேண்டும்"என்றார் ஒருவர்.
"ராகுவின் காலம் என்று சொன்னதால் இப்படி கேட்கிறாயா? ராகுவே பக்கத்தில் இருக்கிறான். ஆதிசேஷன் தான் ராகு. ஆதிசேஷனை வணங்கி, தடவி கொடுத்துவிட்டு, அவன் ஆசி பெற்றுவிட்டு செல்கின்ற நேரம். அகோபிலத்துக்கு அவன் சென்றுவிட்டான். முக்கண்ணனும், படைப்புக் கடவுளும் போய் 15 வினாடிகள் ஆகிவிட்டது. மிச்சம் இருப்பது ஆதி சேஷன் ஒருவனே. ஆதி சேஷன் தான் ராகு கேது என்பது. அவனிடமே சொல்லி அவனது நல்லதொரு வார்த்தையை வாங்கித் தருகிறேன். ஒரு வினாடி கண்ணை மூடி ஆதிசேஷனை பிரார்த்தனை செய்"என்றார் அகத்தியர்.
ஒரு சில வினாடிகள் மௌனமாக ஆதிசேஷனை பிரார்த்தித்தார் அவர்.
"மங்களம் உண்டாகட்டும். ததாஸ்த்து"இது ஆதிசேஷன் சொன்ன வார்த்தை.
நினைத்தது நல்லபடியாக நடக்கும். ததாஸ்த்து அப்படின்னா "ஆசிர்வாதம்"என்றேன் நான்.
"ஆகவே, ஆதிசேஷனிடமிருந்து ஆசிர்வாதம் பெற்ற புண்ணியம் உனக்கு உண்டடா"என்றார் அகத்தியர்.
"அதற்குள் ஏன் இந்த சோகம்? இவனுக்கு மட்டுமா ஆதிசேஷன் ஆசிர்வாதம். எங்களுக்கு இல்லையா, என்று ஏனடா எண்ணுகிறீர்கள்? எல்லோருக்குமே வாங்கித் தருகிறேனடா. அகத்தியன் என்றேனும் பாகு பட்டு பேசியிருக்கிறேனா? இல்லை என்றால் உங்கள் எல்லோரையும் இங்கு வரச்சொல்லியிருப்பேனா? எல்லா புண்ணியங்களும், எல்லாருக்குமே போய் சேரும். அவன் கேட்டான், நான் வாங்கிக் கொடுத்தேன். அவ்வளவுதான். உனக்கு ராகுவின் ஆசிர்வாதம் கிடைக்கவில்லை என்றால் மனம் ஒடிந்து போகக் கூடாதே. அன்னவன் ஆசிர்வாதம் அத்தனை பேருக்கும் உண்டு. ஏன் மனதிற்குள் அடுத்த கேள்வியை கேட்கிறாய்?"என்றார் அகத்தியப் பெருமான்.
"யாரோ மனசுல நினைச்சுண்டு இருந்திருக்கப் போல"என்றேன் நான்.
"ஆமாம்! நான்தான். ஆசிர்வாதம் நமக்கும் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்"என்றார் ஒருவர்.
"அகத்தியப் பெருமானிடம் அது நடக்குமா? மனசுக்குள் நினைத்தாலும் அவர் படித்துவிடுவார்"என்றேன்.
"அப்ப, சந்திரனுடைய அஷ்டம பலன் நமக்கு இல்லை என்பதால், மனக் குழப்பங்கள் நமக்கு வராது இல்லையா?"என்றார் ஒருவர்.
"ஆமாம், எதுவுமே உங்களை பாதிக்காது"என்றேன்.
"எதுவுமே நம்மை பாதிக்காது. தவறான எண்ணங்கள், செயல்கள் எதுவுமே, நாம் செய்ய மாட்டோம்."என்றார் ஒருவர்.
"அரசியலை பற்றி கேட்கலாமா?"என்றார் ஒருவர்.
"அரசியலை பற்றி அகத்தியன் வாக்குரைக்க மாட்டோம்"என்றார் பெருமான்.
"அரசியலுக்கும், அகத்தியனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. குறுக்கு வழியில் நீ பணம் சேர்ப்பதற்கா விரும்புகிறாய்? சற்று முன் சொன்னதை எல்லாம், அத்தனையும் மறந்து விட்டாயே. என்ன? புனிதத்தை நோக்கி வந்திருக்கிற புண்ணியவான் என்று சொன்னவுடன், அரசியலில் நுழையலாமா என்று கேட்கலாமா? அரசியலில், உன்னால், எதையும் தாங்குகிற வலிமை இருக்கிறதா? நான்கு பேரை கொலை செய்து, நீ உள்ளே போகத் தயாரா? தடியடிக்கு தயாரா? காவல் துறையில் சென்று "ஜாமீன்"எடுக்க முடியுமா? பொல்லாத பொய்களைச் சொல்லி, மேடை போட்டு கை தட்ட முடியுமா? இருக்கிற செல்வத்தை எல்லாம் இழந்துவிட்டு, ரோட்டிலே, சுவரொட்டியால் விளம்பரத்தை தேடிக் கொள்ள விரும்புகிறாயா? அரசியல் எவ்வளவு பெரிய சூதாட்டம்? இவ்வளவு தூரம் அகத்தியன் உன்னை புண்ணியவான் என்று சொன்னது, அடுத்த நிமிடம் உன் புத்தி எங்கோ நோக்கி செல்கிறதே. உன்னை எப்படி திருத்துவது என்று தெரியவில்லையே."என்றார் அகத்தியப் பெருமான்.
"சரிதான், இது தேவையா? ஏன் சார் இந்த அரசியலுக்கு ஆசை படறீங்க? பாருங்க அவர் கோபப்பட்டுடார்!"என்றேன் நான்.
சித்தன் அருள்........... தொடரும்!