[நம்பிமலை பாதை]
நண்பரின் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்வியால் சற்றே கோபப்பட்ட அகத்தியர் உடனேயே கோபம் தணிந்து ஒரு புது அத்யாயத்தை கூறத்தொடங்கினார். வந்த செய்திகள் அனைத்தும் எங்கள் அனைவரையும் மலைக்க வைத்தது.
"உணவருந்த சென்ற அன்னவனும் வரட்டுமே. பிறகு சில விஷயங்களை உரைக்கிறேன். அங்கும் சில விஷயங்கள் உண்டடா"என்று வந்தது.
அப்போது பார்த்த போது, குழுவில் ஒருவர் சாப்பிடப் போய்விட்டு வந்து கொண்டிருந்தார். மற்றவர்கள் அவரை அவசரப்படுத்தி வேகமாக வரச்சொன்னார்கள். எல்லோருக்கும் அடுத்தது அகத்தியப் பெருமான் என்ன சொல்ல போகிறார் என்பதில் அறிந்து கொள்வதில் "த்ரில்"இருந்ததில் ஆச்சரியமில்லை.
அவரும் வந்து அமர்ந்ததும், நாடியை புரட்டினேன். அகத்தியரும் கூறலானார்.
"இன்று வரையில் எண்ணற்றச் செய்திகள் இந்த மலைக்கு உண்டாம். இந்த மலைக்குப் பக்கத்தில் இருக்கிற, ஆங்கொரு "தாய் வழிப்பாதை"என்று, ஆண்டு 1246 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாம். பெரும்பாலும் தெய்வங்கள் எல்லாம் இக்கோயிலில் தங்குவதை விட, "தாய் பாதத்தில்"தங்கிவிட்டு, அங்கிருந்து பூமிக்கு அடியில் சுரக்கின்ற ஒரு சுனையில் அங்கு தீர்த்தமாடி, அந்த சுனை நீரால், தேவர்கள் கொண்டுவரும் அமுதத்தைப் படைத்து, உண்டு, பிறகு இங்கு உலா வருவது வழக்கம். இன்றைக்கும் அந்த பாதம் அங்கு இருக்கிறது. அதற்கு பக்கத்திலே, 12 காத தூரம், (ஒரு காதம் என்றால் ஒரு கிலோ மீட்டர் என்று சொல்லலாம்) இடது பக்கம் திரும்பினால், மிகப் பெரிய ஒரு குகை ஒன்று உண்டு. அந்த குகையில் இன்றைக்கு, ஏறத்தாழ, 4214 ஆண்டுகளாக, தவம் செய்கின்ற முனிவர் இன்றைக்கும் அங்கு இருக்கிறார். பெயர் ஏதும் சொல்லவேண்டாமா என்று கேட்கலாம். "பெயரில்லா முனிவர் என்று அவருக்குப் பெயர்". அவர் எப்படி வந்தார், ஏன் வந்தார் என்பதெல்லாம், மிகப் பெரிய ஆராய்ச்சியடா! அன்னவன், இன்றுவரை, அந்தக் கோயிலில், அந்த குகையின் நடு வழியில், அமர்ந்திருப்பது வழக்கம். கோவிலுக்கு நடுவிலே அவன் அமர்ந்திருக்கின்ற பாறைக்குப் பக்கத்தில், அமுதமான நதி ஒன்று அதுவழி செல்லும். அந்த நதியிலுள்ள நீரை எடுத்துக் குடித்தே அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆகவே, நீர் குடித்து வாழுகின்ற அந்த சித்தனுக்கு, "நீர்குடி சித்தன்"என்று பெயர். இன்றைக்கும், ஒரு அளவு, ஒரு பகுதி, ஒரு சொட்டே நாக்கில் விட்டுக் கொண்டால் போதும். அவனுக்கு ஆண்டு ஒன்றுக்கு பசி இருக்காது. அன்றைக்கே, அந்த மகான் சித்தன் அருகிலேயே அந்த குகை இருக்கிறது. தாய் பாதத்திலிருந்து நேரே 12 காத தூரம் சென்றால், ஒரு பாறைக்கு நடுவிலே, அங்கே, "நாராயணா, நாராயணா"என்று சத்தம் கேட்கத்தான் செய்யும். குனிந்து செல்பவர்கள் அதை கேட்டால், அங்கு தெய்வத்தையே காணலாம். அன்னவன் செய்கின்ற தவத்தை ஒட்டி, எம் பெருமான் நம்பி பெருமானும், மற்றவர்களும், அகத்தியன் உள்பட, அனைவரும், அங்கு சென்று அவனை வழிபடுவது வழக்கம். ஏனடா! பார்ப்பதற்கு ஒரு மகான். என்னைவிட ஏறத்தாழ, 123 ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிற அதிசயம் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. அவன் வெளியே வர மாட்டான். வேறு எந்த சித்த செயல்களும் செய்ததாக தெரியவில்லை. ஆனால் நீர் குடித்தே வாழ்கின்ற மகான் ஒருவன் இன்றைக்கும் தாய் பாதத்தில் பக்கத்தில் இருப்பது ஆச்சரியம் தான். முடிந்தால், சென்றால் அங்கு கண்டு கொள்ளலாம். ஆனால், சற்று எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பொல்லாத பூச்சிகளும், மற்ற மிருகங்களும், அங்கு சுற்றி வாழ்ந்து கொண்டிருப்பதால், அவைகள்தான் அவனை காவல் தெய்வமாக நின்று பாது காக்கிறது.
சற்று முன் ஆங்கோர் தகவல் கூட அகத்தியனுக்கு கிடைத்தது. இன்றைய தினம் இந்த நம்பி மலையில் 9 சித்தர்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த 9 சித்தர்களும், இவர்கள் அனைவருக்கும் பக்க பலமாய் இருப்பதை அகத்தியன் யான் அறிவேன். தனிமையில் மாட்டிக் கொண்டிருக்கிறோமே, எப்படியடா? என்ற ஒரு கேள்வி, ஒரு சிலருக்கு, அடிவயிற்றில், லேசாக நரம்பு தெரித்ததெல்லாம் அகத்தியன் யாம் அறிவேன். ஆக எந்த வித பயமும் இல்லாமல் இந்த நம்பி மலையில் இன்றைய தினம் 9 சித்தர்களும் சுற்றி வந்து காப்பதை அகத்தியன் யாம் சொல்லுகிறேன். சித்தர்கள் காப்பது மட்டுமல்ல, அவர்கள் கருணையும் உங்களுக்கு கிடைக்கும். ஆக, எந்த வித தீங்கும் நடக்காமல், நல்ல வித பொழுதாக நாளை விடியும்.
"இங்கிருந்து 32 காத தூரம் சென்றால், வடபுலத்தில் ஆங்கோர் சிறு மலை இருக்கிறது. மலைக்கு அருகிலே சிறு குன்று ஒன்று உண்டு. அந்தக் குன்றுக்கு தென்கிழக்கு திசையில், அக்னி தீர்த்தம் போல் ஒரு ஊற்று வந்து கொண்டிருக்கிறது. அந்த தீர்த்தம் ஆச்சரியப் படும்படியான தீர்த்தம். அது குளிர்ந்த நீரல்ல, கொதிக்கின்ற நீராம். அக்னி என்று கொதிக்க வைத்த நீர் போல, அது இன்றைக்கும் ஆவி பறக்கிற தீர்த்தம். இந்த மாதிரி தீர்த்தத்தை, ஒன்று வடபுலத்தில் கங்கை நதிக்கரையில் தான் காண முடியும். ஆக, அதயெல்லாம் தாண்டி, மலையிலே "அக்னி தீர்த்தம்"இருக்குமாடா என்று கேட்கலாம். அக்னி என்பது கொதிப்பது மட்டுமல்ல.அந்த தீர்த்தத்தை ஒரு முறை உண்டுவிட்டால், ஆண்டு 30க்கு "ஜுரம்"என்பதே வராது. கடும் ஜுரம் வராது, எந்தெந்த பெயரை வைத்து எந்தெந்த உஷ்ண தேவதையை அழைத்தாலும், நெருங்கி வர மாட்டாள், எந்த தொல்லையும் தராது. ஜுரத்துக்காக "ஜுரேஸ்வரர்"என்று ஒரு கோயில் உண்டு. அந்த கோயிலுக்கு சென்றால், இன்றைக்கு யார் வேண்டுமானாலும், ஜுரமடிக்கிற குழந்தைகளை, அந்த கோயில் வாசலிலே போட்டுவிட்டு, ஜுரேஸ்வரருக்கு, வெந்நீரும், மிளகு கஷாயமும் அபிஷேகம் செய்வதை இன்றைக்கும் பார்க்கலாம். ஒரு முறை இந்த வெந்நீரை அபிஷேகம் செய்து, மிளகு கஷாயத்தையும் நிவேதனமாக காட்டிவிட்டால், அந்தக் குழந்தைக்கு, எப்பேர்ப்பட்ட ஜுரமானாலும் விலகிவிடும். அந்த மாதிரி கோயில் உண்டு, தஞ்சை மாநகரிலே. தனியாக ஒதுக்குப் புறத்தில் இருக்கிறது. அதைத்தான் எல்லோருமே, கேள்விப்பட்டிருப்பார். எதற்காக, இந்த தகவலை சொல்லுகிறேன் என்றால், தங்கத்தின் பெயர் கொண்ட மன்னனுக்கு (தங்கராசன்) அன்னவனுக்கு, நல்லதொரு செய்திகளை சொல்லவேண்டும். அவன் அடிக்கடி இங்கிருந்து மலை ஏறி, எவ்வித பயமும் இன்றி அப்படியே வலம் வந்து சித்தர்கள் தரிசனமும் பெற்று, அப்படியே பொதிகை மலை வந்து, உலா வந்து, பின்னர் வருவது வழக்கம். அன்னவன் அடுத்தமுறை செல்லும் போதெல்லாம், இங்கிருந்து 30 காததூரம் சென்றால், அந்த மலையில் அக்னி தீர்த்தத்துக்கு அருகில் ஒரு சிறு குகை வரும். மலையை தொட்டால், சற்று உஷ்ணமாக இருக்கும். அந்த மலையை சற்று எட்டிப் பார்த்தால், கரடு முரடாக இருக்கும், சற்று பாசி படிந்திருக்கும். சாதாரணமாக ஏதோ துர்நாற்றம் வீசுவது போல கெட்ட நாற்றம் கூட வீசலாம், பயப்படக் கூடாது. அங்கு, அழுகுணி சித்தர் என்பவர் அமைதியாக அமர்ந்து, அக்னி தீர்த்தத்தில் அன்றாடம் குளித்துவிட்டு செல்வது வழக்கம். அந்த அக்னி தீர்த்தத்தை, ஒருவன், ஒருமுறை வெளியே கொண்டுவந்துவிட்டு, அதில் சிறிது மிளகு கஷாயத்தை கலந்து குடித்தால், ஆண்டு 42 ஆண்டுகளுக்கு, அந்த நபருக்கு எந்தவித உஷ்ணம் சம்பந்தமான நோயோ, பித்த நோயோ, கபாலத்தில் ஏற்படும் நோயோ, ஞாபக மறதியோ, அல்லது மூளைச் சிதைவோ, எதுவுமே ஏற்படாது. அத்தனை மருத்துவம் வாய்ந்த அக்னி தீர்த்தம், இங்கிருந்து 32 காத தூரத்தில் இருக்கிறது. அங்கிருந்து 48 காத தூரம் சென்றால், மற்றொரு அருமையான குகை ஒன்று வரும். நீர்வீழ்ச்சி போல தானே அருமையாக கொட்டிக் கொண்டிருக்கும். அதை பருகுவதற்காக, பல்வேறு சித்தர்கள் எல்லாம், வண்டு போல, பட்டாம் பூச்சி போல பறந்து கொண்டு அதை குடிப்பது வழக்கம். எங்கேயாவது கேட்டிருக்கிறாயா இந்த அதிசயத்தை. பட்டாம் பூச்சிகள் வந்து பூவில் உள்ள தேனைத்தான் எடுக்கும். ஆனால் இந்த மலையின் 42 காத தூரம் இருக்கின்ற மலை மேலே, அந்த குன்றிலிருந்து வருகின்ற நீரிலே, பட்டாம் பூச்சிகள் தும்பிக்கையை நீட்டி அங்கிருந்து வருகின்ற நீரை குடித்து மகிழும். எந்தெந்த நீரில் அது தும்பிக்கை நீட்டுகிறதோ, அதன் தும்பிக்கையில் தேன் ஒட்டிக்கொள்ளும். தேன் கலந்து வருகின்ற ஒரு தீர்த்தமும் அங்கு இருக்கிறது. அக்னி தீர்த்தமும் இருக்கிறது, ஆம்! தேன் கலந்த தீர்த்தமும் இருக்கிறது. 42 காத தூரத்தில் இந்த அதிசய காட்ச்சியை காணலாம். எதற்காக சொல்லுகின்றேன் என்றால், யாரும் செல்ல முடியாத இடம் அது. பயங்கரமான, கால் வைக்க முடியாத, சற்று சறுக்கலான பாறைகள் உள்ள இடம். அந்த பாறைகளில் ஒரு கை வைத்தால், நடுங்கி, உருண்டு விழுந்து 2000 அடி கீழேதான் விழவேண்டி இருக்கும். எந்த வித பாதுகாப்பும் இல்லை.
ஆனால், யார் யார், அந்த வழி செல்கிறார்களோ, அங்கெல்லாம் அழுகுணி சித்தரும், இடைக்காட்டு சித்தரும், அங்கு அமர்ந்து, பக்க பலமாய், இரு பக்கமும் நின்று கொண்டு, வருகிற போகிறவர்களை எல்லாம் பாதுகாத்து, பக்குவமாக கரை ஏற்றி விடுகிறார்கள். அது மட்டுமல்ல. இன்னும் சொல்லப்போனால், ஆச்சரியமான சம்பவம், இன்னொன்றும் நடக்குமடா!
சித்தன் அருள்.................. தொடரும்!