"யாம் வருவோம்"என அகத்தியர் கோவிலில் உத்தரவு வந்தபின், உண்மையிலேயே, ஒரு மிகப் பெரிய பலம் வந்துவிட்டது, என்பதே உண்மை. இத்தனை கருணையுள்ள தகப்பன் இருக்க, எல்லாம் அதனதன் இடத்தில் சென்று அமரும் என்று தோன்றியது. இருப்பினும், எது வரவேண்டுமோ அது அங்கிருக்கும். அல்லாதது அவர் அருள் இல்லாதது என்றும் தோன்றியது. ஏன் என்று தெரியவில்லை.
அகத்தியருக்கு சிரம் தாழ்ந்த நன்றியை கூறி, அவர் உத்தரவுடன் வீடு வந்து சேர்ந்தேன்.
"அந்த நாளுக்கு"முன் ஒரு சனிக்கிழமை விடுமுறை வந்ததால், விட்டுப் போன விஷயங்களை நிச்சயம் செய்வதற்காக, மறுபடியும் திருநெல்வேலி, கோடகநல்லூர் சென்றேன். கோவில் நிர்வாகிகள் முதல், ஊர்காரர்கள் ஒவ்வொருவராக 2ம் தியாதிக்கான பூசைகளை பற்றி கேட்டனர்.
எல்லோருக்கும் பதில் சொல்கிற பொழுது, ஒருவர் கேட்டார்.
"காலையிலே வருகிறவர்களுக்கு, ஏதேனும் சாப்பிட வேண்டும் என்றால், என்ன செய்வீர்கள்? இங்குதான் ஒரு உணவு விடுதி கூட கிடையாதே?"என்றார்.
"ஆமாம்! அதை பற்றி அடியேன் யோசிக்கவே இல்லையே! உங்களால், இங்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால், ஒரு சிறு வியாபாரத்திற்கு ஏற்பாடு செய்ய முடியுமா?"என்றேன்.
அவரும் "நடுக்கல்லூரில் ஒரு சைவ உணவு விடுதி உள்ளது. அவரிடம் பேசி பார்க்கிறேன். ஏற்பாடு செய்கிறேன்"என்று கூறினார்.
"சரி! அப்படியே ஆகட்டும்"என்று கூறி சென்றவர், உணவு விடுதி உரிமையாளர் ஒத்துக்கொண்டதை பின்னர் தொலை பேசி மூலம் என்னிடம் கூறினார்.
இந்த விஷயத்தில்தான் எனக்கு பெருமாளும், அகத்தியரும் சொல்லாமல், சொல்லி சூடு போட்டனர்.
இந்த வருடம் தனி ஒருவனாக ஓடத்தான் பெருமாளின் உத்தரவு. அடியேனோ, இன்னொருவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்ததில் அவர்களுக்கு விருப்பம் இல்லை போலும். அன்றைய தினம், ஒத்துக்கொண்டவர் வராமல் போக, அடியேனும் பிற விஷயங்களில் கவனத்துடன் இருந்து, காலை சிற்றுண்டியை பிறருக்கு ஏற்பாடு செய்தது மறந்து போக, சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை அகத்தியர் பூசைக்கு வந்து, பசியுடன் தவித்ததை கண்டு அரண்டு போய்விட்டேன். இறைவன், அகத்தியர் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், இது அடியேனுடைய தவறு. அந்தநாளில் வந்திருந்து தவித்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அத்தனை விஷயங்களை கூறி அகத்தியர் அடியவர்களை அழைத்த அடியேனுக்கு, அங்கு உணவு விடுதி கிடையாது என்று சொல்ல மறந்து போனது உண்மை. இனி வரும் வருடங்களில் இந்த மாதிரியான தவறு நடக்க கூடாது என இறைவனிடம், அகத்தியரிடம் வேண்டிக் கொள்கிறேன்.
ஏற்பாடுகளில் மிச்சமிருந்தது பூமாலை, பூசைக்கான சாதனங்கள். திருநெல்வேலியில் வசிக்கும் ஒரு நண்பரின் துணையுடன், அடியேனே நேரடியாக பார்த்துப் பார்த்து, ஏற்பாடு செய்தேன். அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது.
அந்த நாளுக்காக காத்திருந்தேன்.
நவம்பர் 1ம் தியதி இரவு 10.30க்குள் கிளம்புவதாக தீர்மானம். கூட வருகிற நண்பர்கள் வந்து சேர்ந்த பொழுது 11.30 ஆகிவிட்டது. எங்கள் ஊரில் இருக்கும் பிரபலமான விநாயகர் ஆலயத்தில் அவரை வணங்கி, கிளம்பினோம்.
திடீர் என ஒரு எண்ணம்.
"வண்டியை பூக்கடையில் நிறுத்து. அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும் இரு மாலை வாங்கி கோவில் வாசல் கதவில் மாட்டிவிட்டு, வணங்கி செல்வோம்"என்றேன்.
பூக்கடையில் மிக அழகான 4 அடி உயர மாலை கிடைத்தது.
அகத்தியப் பெருமான் கோவில் வாசல் கதவில் மாட்டி விட்டு, பிரார்த்தித்து, எங்கள் பயணத்தை தொடர்ந்து, திருநெல்வேலி சென்றடைந்தோம்.
நெல்லையப்பர் கோவில் அருகில், மார்க்கெட்டில், பெருமாளுக்கான பூமாலையை வாங்கி கொண்டு, கோடகநல்லூர் கோவில் வாசலை அடைந்தவுடன், ஆச்சரியப்பட்டு போனேன்.
நாங்கள் சென்ற பொழுது காலை மணி 6. எங்களுக்கு முன்னரே வந்திருந்த அகத்தியர் அடியவர்கள் ஒரு குழுவாக, கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தனர். அந்தநாள், வந்தது வார நடுவில் என்பதால், அதிகம் அகத்தியர் அடியவர்கள் வர வாய்ப்பில்லை, என்கிற அடியேனின் எண்ணத்தை, "நீ என்னடா, நினைப்பது!"என்கிற படி அகத்தியர் அமைத்துக் கொடுத்தார்.
திரும்பி தாமிரபரணி நதியை பார்த்தேன். இருகரை தொட்டு விரிவாக, வேகமாக சென்று கொண்டிருந்தாள். இது அடுத்த ஆச்சரியம்.
"இன்று என்ன? அகத்தியரும், பெருமாளும், நிறைய ஆச்சரியங்களை தருவார்கள் போல இருக்கிறதே"என்று நினைத்தபடி, பெருமாளை, அகத்தியரை, தாமிரபரணி தாயை மனதில் தியானித்து கோடகநல்லூர் மண்ணில் கால் பதித்தேன், என்னென்ன நடக்கப் போகிறதென்று தெரியாமலே!
சித்தன் அருள்............... தொடரும்!