ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
நாடி வாசிப்பவர்கள் அனைவரும் கூறுகிற ஒரே வாக்கியம் இதுதான்!
"சித்தர்களில் அகத்தியப் பெருமானின் அருள், அருகாமை இருந்தால், அவனை அலையவிட்டு, ஆன்மீக பைத்தியமாக்கி, உடலை வருத்தி, கர்மாவை போக்கி, இறையருளை கூட்டி, ஒன்று முடிந்ததும் "அப்பாடா! சற்று இளைப்பாறலாம்!"என்று தீர்மானிக்கும் பொழுது அடுத்த நிகழ்ச்சி அல்லது அடுத்த புண்ணிய தலத்துக்கு இழுத்து சென்று உண்மையை உணர்த்துவார்! அந்த உண்மை மிக மிக உயர்ந்த விஷயமாக இருக்கும். எங்கிருந்துதான் நம் உடலுக்கு சக்தி வரும் என்று தெரியாது! அந்த பாதையில் செல்லும் பொழுது, உலகியல் விஷயங்களை நிறையவே இழந்துவிடுவோம். அது ஒரு சோதனை என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட விஷயங்களை பற்றி நமக்கு தெரிவிக்க வேண்டுமென ஒரு சித்தன் நினைத்துவிட்டால், நம் மனதுக்கு பிடித்தமான எந்த விஷயமாயினும், அதன் வழி புகுந்து, செய்தியை தெரிவித்து விடுவார்கள்!. செய்தியை உணர்ந்தபின், அதை சென்று சேரும் வரை, நம் பாடு திண்டாட்டமாகவே இருக்கும். ஆயினும், கடை வரை உதவியும் கிடைக்கும்."
மேற்சொன்ன வாக்கியத்தை அடிப்படையாக வாழ்க்கையில் நிலை நிறுத்தியதால், அடியேன், மனதை இறை பாதத்தில் வைத்துவிட்டேன். அதனால், மிருதங்கத்துக்கு ரெண்டு பக்கத்திலிருந்தும் அடி என்பதை போல, ஒருத்தர் (இறைவன்) இழுத்து முடித்த நொடியில் அடுத்தவர் (பெரியவர்கள்) இழுப்பார்! கடலில் எப்பொழுது அலை ஓய்வது நான் என்னிஷ்டப்படி நிதானமாக குளிப்பது! ஆகவே, "என்னிஷ்டம்"என்பதை அடியேன் மறந்தே போனேன் என்பது தான் உண்மை.
சமீப காலமாக, அகத்தியரின் பாதையில், அவருடன் வாழ்க்கையை இணைத்து கொண்டு செல்பவர்கள் பலரிடமும் தொடர்பு கொள்ள முடிந்தது. எல்லாவற்றிலிருந்தும், விலகிநின்று, கிடைக்கிற உத்தரவை நிறைவேற்றுவதில் மட்டும் இருந்து வந்த அடியேன் மனோ நிலையை ஓரளவுக்கு அகத்தியப் பெருமான் மாற்றினார் என்பதே உண்மை. ஒரு அகத்தியர் அடியவரிடம் உரையாடும் பொழுது ஒரு குறிப்பிட்ட பெருமாள் கோவிலை சுட்டிக்காட்டி, அங்கு சென்று அருள் பெற்று வாருங்களேன் என்றார். எதோ அகத்தியர் செய்தி சொன்னதுபோல்தான் உணர்ந்தேன்.
அவர் சொன்ன கோவில், திருநெல்வேலிக்கு அருகில் சீவலப்பேரி என்கிற கிராமத்தில் உள்ளது. அடியேனோ, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், தாமிரபரணித்தாய் சுற்றி சுற்றி சென்று இறைவனை வழிபட்டு செல்கிற கோவில்களை பார்ப்பதில் விருப்பம் உள்ளவன். அகத்தியரால் உருவாக்கப்பட்ட தாமிரபரணி நதியானது, காரணமின்றி, சுற்றி செல்வதில்லை. எங்கெல்லாம் அந்தத்தாய் செல்கிறாளோ, அதற்கும் ஒரு காரணம் இருக்கும், என்று நம்புகிறவன் நான். தான் சென்ற வழிகளில், ஒவ்வொரு இறை சன்னதியிலும், மனித குலத்துக்கு என வேண்டிக்கொண்டு ஒரு வரத்தை பெற்று தந்துள்ளாள். அந்த இடத்தின் வரமென்ன? அதை ஏன் தெரிந்து கொண்டு வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி பார்க்கக்கூடாது? என்கிற எண்ணம் அடியேனுள்ளே உண்டு. அடியேன் உணர்ந்ததை, உடனேயே, அடுத்தவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்; யாம் பெற்ற இன்பம் இவ்வையகத்து மனிதருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படை எண்ணம்தான், காரணம். உதாரணமாக, பாபநாசம், கோடகநல்லூர், என நிறைய இடங்களை சித்தன் அருள் வலைப்பூவில் தெரிவித்ததை செல்லலாம்.
சனிக்கிழமை விடுமுறையாக இருந்ததால், அன்று காலை சீவலப்பேரி கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்று, மாலை கோடகநல்லூர் கோவிலுக்கு செல்லலாம் என்று தீர்மானித்தேன். அன்று கிளம்பி கோவிலுக்கு போனபொழுது, பெருமாள் விளையாடிவிட்டார்.
சீவலப்பேரி ஊர் எல்லையில் ஒரு கோவில் இருக்கவே, அதுதான் அந்த கோவில் என்று நினைத்து, அருகில் சென்று பார்த்தால், பூட்டி இருந்தது. அவ்வழியே சென்ற ஒரு பெண்மணியிடம் "இதுதான் பெருமாள் கோவிலா, வேறு கோவில் உண்டா?"என்று வினவ, அவளும் "இது பெருமாள் கோவில்"என்று கூறிச் சென்று விட்டாள்.
"சரி! நமக்கு பாக்கியம் இல்லை போலும்! பிறகு பார்க்கலாம்! நாளை காலை சீக்கிரமாகவே வந்துவிடுகிறேன். உம்மை விடுவதாக இல்லை"என்று மனதுள் நினைத்து, திரும்பினேன்.
திரும்பி வரும் வழியில் "செய்தி வந்த கோவில் இதுவல்ல. நீ தான் தப்பாக புரிந்து கொண்டுவிட்டாய்"என்று உத்தரவு வந்தது.
உடனேயே, செய்தி சொன்ன அகத்தியர் அடியவரை தொடர்பு கொண்ட பொழுது, கோவில் இருப்பிடம் பற்றிய விவரங்களை கூறிய பொழுது, "அது தானே கோவில்"என்றார்.
"சரி! நான் எடுத்த கோவிலின் புகைப்படத்தை அனுப்புகிறேன்! பார்த்து விட்டு சொல்லுங்கள்"என்று அனுப்பி வைத்தேன்.
"அடியேன் சொன்ன கோவில் இதுவல்ல! இதுவும் பெருமாள் கோவில்! இங்கிருந்து மேலும் 2 கிலோ மீட்டர் சென்றால் இடதுபக்கத்தில் ஒரு கோவில் விளம்பர பலகையில் "முக்கூடல் சங்கமம்"என்று இருக்கும். வலது புறத்தில் நேர் எதிரே துர்கை அம்மன் கோவில் இருக்கும். இடது புறத்தில்தான் பெருமாள் கோவில் உள்ளது. நாளை செல்லுங்கள். அர்ச்சகரிடம் அடியேன் செய்தியை கூறிவிடுகிறேன்"என்றார்.
எங்கேயோ தவறு செய்துவிட்டோமே! சரி! மாலை கோடகநல்லூர் சென்று பெருமாளிடம் கேட்டுவிடுவோம். அது வரை மௌனம் காப்போம், என்று தீர்மானித்து மாலை வருவதற்காக காத்திருந்தேன்.
சித்தன் அருள்................. தொடரும்!