[ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், பாலராமபுரம்]
"சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகளை"தொடரும் முன், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம். பொதுவாகவே, சித்த மார்க்கத்தின் விஷயங்களை பற்றி எல்லோரும் கேட்கும் படி, அந்த மார்கத்தில் செல்லும் யாரும் பேசமாட்டார்கள், என்பதே உண்மை. மிக மிக கவனமாக, விஷயங்கள் வெளியே தெரியாதபடி, பேசுவார்கள். அது வித்யார்த்திகளாய், ஒரு குருவின் கீழ் இருந்து கற்கும் பொழுது, அவர்களுக்கு உணர்த்தப் படுகிற ஒரு வழிமுறை. அதிலொன்றும் தவறில்லை. அனாவசியமான கேள்விகளை தவிர்த்து விடலாம். ஒருவருக்கு புரிய வைப்பதற்காக, நேரம், சக்தி போன்றவைகளை விரயம் செய்யாமல் இருக்கலாம். ஒருவர், அவர்கள் வளையத்துக்குள் கடந்து செல்வதென்பதே மிக கடினமான விஷயம். நிறைய சோதனைகள், சிறு சிறு வார்த்தைகளில், மிகப் பெரிய விஷயத்தை கூறினால், அதை சரியாக கிரகித்துக்கொள்ளும் தன்மை அந்த ஒரு வருக்கு இருக்கிறதா? ஏதன் மீதும் பற்றில்லாமல் இருக்கிறதா? என்பதை எல்லாம் தெளிவாக அவர்கள் புரிந்து கொண்டபின் தான், மெதுவாக விஷயங்களை வெளியிடுவார்கள். அவர்கள் முன் சென்று அமருபவர்களுக்கு, மிக மிக கடினமான பொறுமை வேண்டும். சந்தேகம் தெளிய கேட்கும் கேள்விகளின் விதம், வார்த்தைகள் ஆகியவை மிக உன்னிப்பாக அவர்களால் கவனிக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேல், தெளிவடைய செல்கிறவருக்கு, "சித்தன் அருள்"நிச்சயம் வேண்டும்.
சில கலந்துரையாடல்களில் வெளி வந்த நல்ல விஷயங்களை, எத்தனையோ வருடங்களாக மனதுள் ஒதுக்கி வைத்திருந்தேன். நெருங்கிய வட்டத்திலுள்ள, நண்பர்களிடம் கூட அனைத்தையும் பகிர்ந்து கொண்டதில்லை. இதிலுள்ள கருத்துக்களை, அந்த பாதையில் இறங்கி சென்று, ஆழத்திலிருந்து உணர்ந்து கொண்டால் அன்றி, யாராலும் நம்ப முடியாது. நீங்கள் கூட பார்த்திருக்கலாம், "கேட்பதற்கு நன்றாக இருக்கிறது, நடைமுறைக்கு சாத்தியமா!"என்று இந்த தொடர் வெளிவந்த பொழுது, விமர்சித்தவர்களும் இங்கு உண்டு. அது போல், எங்கேனும் செல்லும் பொழுது, யாரேனும்,"சித்தன் அருள்"வலைப்பூவை தொடர்கிறேன், அகத்தியரின் வழி காட்டுதலை நடைமுறைப் படுத்துகிறேன்"எனக் கூறினால், புன்னகைத்தபடியே "அப்படியா! நல்லது! அவர் அருள்வார்"என்ற பதிலை கூறிவிட்டு அமைதியாகிவிடுவேன். ஏன் என்றால், இந்த வலைப்பூ அகத்தியருக்கு சொந்தமானது, என்று அடியேன் உணர்ந்ததால்.
இப்படிப்பட்ட நிலையில், இந்த தொடரை எழுத தொடங்கிய பின், ஒரு முறை, "சித்த மார்கத்தில்"செல்கிறவர்களின் ஒரு குழுவுக்குள் சென்று அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த குழுவில், ஒருவர் என் நண்பர். அடியேனை பற்றி நன்கு தெரிந்தவர். மிக விரிவான கலந்துரையாடல், சித்தர்கள் பாடல்களை மேற்கோள் காட்டி பல நுணுக்கமான விஷயங்களை பேசினார்கள். பலரின் சந்தேகங்களுக்கு, தலைமை வகித்த ஒருவர் தெளிவாக விடை கூறினார்.
அனைவரும், திரும்ப திரும்ப பல கேள்விகளை கேட்டு பதிலை பெற, அடியேன் அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தேன். நான் அமைதியாக இருப்பதை பார்த்த அவர், "என்ன! பேசவே மாட்டேன் என்கிறீர்கள்? சரளமாக பேசி பங்கு பெறலாமே! இங்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது"என்றார்.
அடியேன் புன்னகைத்த படியே நண்பரை பார்க்க, அவர் ஏதோ ஒரு உந்துதலில் "நாம் படித்தோமே! சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்! நீங்கள் கூட கேட்டீர்களே, இதை யார் எழுதுகிறார்கள் என்று - அவர் தான் இவர்"என்றாரே பார்க்கலாம்.
எக்கச்செக்கமாக அடியேனை மாட்டிவிட்டு விட்டாரே நண்பர் என்று நினைத்தபடி, கழுத்தை தடவியபடி, கூச்சத்துடன் அவரை நிமிர்ந்து பார்க்க, அவர் முகம் நிறையவே மாறிவிட்டிருந்தது. அதில் நிறைய கேள்விகள் தங்கி நிற்பது புரிந்தது.
சற்று நேர அமைதிக்குப்பின், "எனக்கு சில விஷயங்கள் பேசவேண்டும். சற்று தனியாக வருகிறீர்களா?'என்று கூறி பதிலுக்கு எதிர் பார்க்காமல் நடந்து போனார்.
அடியேன் நண்பரை பார்த்து "எனக்கு, இது தேவையா? சும்மா இருந்திருக்க வேண்டியது தானே!"எனவும்,
"நானும் வருகிறேன் உன் கூட"என்று நண்பர் கிளம்பினார்.
தூரத்திலிருந்து குரல் கேட்டது "அவர் மட்டும் வந்தால் போதும்".
ஒரு அறையின் வாசலில் நின்று கொண்டிருந்தவர். அருகில் சென்றதும் "உள்ளே போவோம்"என்று நடக்கத் தொடங்கினார்.
"எம்பெருமானே! அகத்தீசா!"என மனம் அழைத்தது.
"சரி! வருவதை எதிர்கொள்வோம்!"என்று தீர்மானித்து, அவர் காட்டிய ஆசனத்தின் மேல் அமர்ந்து கொண்டேன். சுற்றிலும் தெய்வீக மணம். த்யானம் பூசை, செய்கிற இடம் போல் தோன்றியது.
"சித்த மார்க்கத்தின் அறிவுரைகள்"நீங்கள் தான் தொகுக்கின்றீர்களா?"என்றார்.
ஆம்! என மெதுவாக தலையசைத்தேன்.
"யார் உங்களுக்கு இத்தனை விஷயங்களை கொடுத்தார்கள்?"
"மன்னிக்கவும்! பெயர் தெரிவிக்க அனுமதியில்லை. செய்து கொடுத்த சத்தியத்தை மீற அடியேனுக்கு மனமில்லை"என்றேன்.
"நீங்கள் சித்த வித்யார்த்தியா?"என சற்று கோபத்துடன் கேட்டார்.
பதில் கூற விருப்பமின்றி அமைதியாக இருந்தேன். அப்படி கடுமையாக கேள்வி கேட்கிற அளவுக்கு என்ன தவறை செய்துவிட்டேன் என குழம்பிப் போனேன்.
யாரோ அருகிலிருந்து "தைரியமாக எதிர்கொள்"என்று கூறுவது கேட்டது.
"உங்களுக்கு என்ன பிரச்சினை? எதற்கு இத்தனை கடுமையாக கேள்விகள்?"என்றேன்.
"எந்த தைரியத்துல, ரகசியமாக இருந்த பல விஷயங்களை, இப்படி வெளியிடுகிறாய்! யார் உனக்கு அனுமதி கொடுத்தார்கள்? சித்த மார்கத்துக்குள் வலம் வந்துவிட்டால், அதன் கட்டுப்பாடுகளுக்கு அனைவரும் உட்பட்டுத்தான் ஆகவேண்டும். அதனால் தான் சித்தர்களே, பல விஷயங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள். யாருடைய உத்தரவின் பேரில் இவை வெளியிடப்படுகிறது?"என்றார்.
வயதில் பெரியவர். சிறந்த ஞானி. இன்று நமக்குத்தான் நேரம் சரியில்லை என்று நினைத்தபடி "இங்கு உரைக்கப்படும் விஷயங்கள், குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒரு சித்த வித்யார்த்தியால் உரைக்கப்பட்டது. பல வருடங்களாக ரகசியமாக, என்னுள்ளேயே இவைகள் இருந்து வந்தது. இப்பொழுதுதான் அது வெளிப்படவேண்டும் என்கிற நேரம் போலும். "பிறருக்கு தெரியாதவரைதான் ஒன்று ரகசியம். அதுதான், உங்கள் கலந்துரையாடலில் சித்த ரகசியங்கள், நிறைய வெளியே வந்து விட்டதே. பிறகென்ன. அதையே உலகுக்கு உரைக்கலாமே!"என உத்தரவு கொடுத்தார், அவர்! அதனால்தான் வெளியிடுகிறேன்!"என்றேன்.
"யார் அந்த "அவர்"?"என்றார்.
"சித்தர்களின் தலையாய சித்தர் "அகத்தியப் பெருமான்"எனக்கூறி அவர் முகத்தை கூர்ந்து கவனித்தேன்.
அவர் முகத்தில் நீண்ட யோசனை தெரிந்தது! மேலும் கேள்விகள் இல்லை. கடின உணர்வுகள் இல்லை. அமைதியாக அமர்ந்திருந்தார்.
"உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ப்ரம்ம முகூர்த்த "வாசி யோகத்தில்"அவரிடமே நீங்கள் கேட்டு தெளிவடையலாம்"என்று நிதானமாக கூறினேன்.
சற்று நேரம் மௌனம் நிலவியது.
"சரி! அடியேன் உத்தரவு வாங்கிக்கொள்கிறேன்! திருச்சிற்றம்பலம்!"எனக் கூற, குனிந்து யோசித்துக் கொண்டிருந்தவர் "ஹ்ம்ம்"என்றார்.
வெளியே வந்தேன், யோசனையுடன். "நான் எதுவும் தப்பு பண்ணலை. அனைத்தும் அகத்தியருக்கு சமர்ப்பணம் என்று வாழ்ந்து வருவதினால், ஒரு வேளை, நேரத்துக்கு அருகிலிருந்து உதவி பண்ணினாரோ? அத்தனை கடினமாக பேச்சை தொடங்கியவர், குருநாதர் பெயரை உச்சரித்தவுடன், அடங்கிப் போய்விட்டாரே! இது என்ன மாயம்! குருநாதா! உங்களை புரிஞ்சுக்கவே முடியலை. குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறீர்களே! காப்பாற்றினீர்கள்! மிக்க நன்றி"என அகத்தியப் பெருமான் உறையும் திசை நோக்கி தொழுது, வீடு வந்து சேர்ந்தேன்.
இங்கு, இந்த நிகழ்ச்சியை ஏன் கூறவேண்டும், என இதை படிக்கும் நீங்கள் நினைக்கலாம். சித்தர்கள் பாதையில் சஞ்சரிக்கும்/ விரும்பும் யாருக்கும், இதே போன்றோ, சற்று வித்யாசமாகவோ, அனுபவங்கள் ஏற்படலாம். அப்படி ஏற்படும் பொழுது, குருநாதரை தியானித்து காப்பாற்றி கரையேற்றுங்கள் என மனதுள் வேண்டினால், நிச்சயம் உங்களுக்கும் அருள்வார்!