Quantcast
Channel: அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!
Viewing all articles
Browse latest Browse all 1977

சித்தன் அருள் - 369 - "பெருமாளும் அடியேனும்" - 57 - கேசரிக்கு வந்த சோதனை!

$
0
0

“தங்களுக்கா ஸ்வாமி சந்தேகம்? கேளுங்கள் பெருமாளே!”

“உன் பெயரில் ‘அஞ்சனாத்திரி’ என்று இந்த மலையின் ஒரு பகுதிக்கு பெயர் சூட்டுவதில் உன் கணவருக்கு ஏதேனும் ஆட்சேபணை இருக்குமா? கொஞ்சம் கேசரியிடம் கேட்டுச் சொல்லேன்.”

“பெருமாளே! இதென்ன விளையாட்டு? தாங்கள் சொல்லி என் கணவர் கேட்காமலா இருக்கப் போகிறார்? நிச்சயம் ஏற்பார் வேங்கடவா!”

“இல்லை அஞ்சனை! தாயும் பிள்ளையுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறுதானே?”

“ஆமாம்”

“அப்படியெனில் கேசரியும் அஞ்சனையும் வேறு வேறுதான்”

“தங்கள் சொல்படி....”

“வாயுபகவானுக்கு தத்து கொடுக்க நீ முன்வந்தாய்”

“ஆமாம்”

“உன் கணவன் முன்வரவில்லை.”

“ஆமாம்”

“அதற்கே ஒத்துக் கொள்ளாதவன் இப்போது அவனை விட்டு விட்டு உன் பெயரில் இந்த ‘மலை’ எந்நாளும் விளங்கும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வான்?”

“இல்லை வேங்கடவா! அவர் இதுவரை என் சொல்லை மீறி எதையும் செய்ததில்லை.”

“இப்பொழுது ‘ஹனுமான்’ விஷயத்தில் மாறியிருக்கிறதே”

“திருமலை அரசே! தாங்கள்தான் பிள்ளையையும் கிள்ளி விடுகிறீர்கள். பின்னர் தொட்டிலையும் ஆட்டுகிறீர்கள். தங்களுக்கு இது தெரிந்திருந்தும் என்னையும், கேசரியையும் பிரிக்கலாமா?” என கைகூப்பி, கண்ணீர் மல்கக் கேட்டாள்.

திருமால், அஞ்சனையையே கண் மூடாமல் கருணையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன அஞ்சனை? நானா உங்கள் இருவரையும் பிரித்தேன்? உன் கணவன் தான் இப்போது பிரிந்து செல்கிறான்”

“இல்லை வேங்கடவா! இல்லை. அவர் மனம் பிள்ளைப் பாசத்தால் நேற்றிரவு முழுவதும் சஞ்சலப்பட்டது உண்மைதான். அவரை நான் சமாதானப் படுத்தியதும் உண்மைதான். ஆனால் தங்கள் உத்தரவை கேசரி ஒரு போதும் மீறமாட்டார். என்னை விட்டு அகலவும் மாட்டார். இது சத்தியம்.” என்றாள் அஞ்சனை.

“அஞ்சனாத்திரி மலைக்குச் சொந்தக்காரியாக மாறிவிட்ட அஞ்சனை! உன் கணவர் இப்பொழுது உன்னிடம், உன் ஆசிரமத்தில் இருக்கிறானா என்று பார். இருந்தால் அவனை என்னிடம் அழைத்து வா. நீ வரும்வரை நான் காத்திருக்கிறேன்.” என்று வேங்கடவன் சொன்னபோது, ‘ஏதோ ஒரு சூட்சுமம் நடந்திருக்கிறது. இல்லையெனில் திருமலைவாசன் இப்படியரு சொல்லைத் தன்னிடம் சொல்லியிருக்க மாட்டார், என்ற எண்ணத்தோடு, தான் பரண் அமைத்துத் தங்கியிருந்த ஆசிரமத்திற்குச் சென்றாள்.

அங்கு கேசரியையும் காணவில்லை. ஹனுமனையும் காணவில்லை. பல்வேறு இடங்குளுக்கும் சென்று பார்த்தாள். சேவகர்களும் நான்கு திக்குகளிலும் தேடிப் பார்த்தனர்.

நான்கு நாழிகைகள் ஆயிற்று.

எங்கு தேடியும் கேசரியையும் ஹனுமனையும் காணவில்லை.

‘என்ன ஆயிற்று’ என்று தெரியாமல் அஞ்சனைக்கு அழுகை வந்துவிட்டது. நேராக வேங்கடவனையே நேரில் சந்தித்து இதுபற்றிக் கேட்டுவிடலாம் என்று பதறியடித்துக் கொண்டு ஓடினாள்.

திருமால் புன்னகையுடன் காணப்பட்டார்.

“என்ன அஞ்சனை! உன் கணவன் கேசரி என்ன சொன்னான்? உன் பேரில் இந்த மலை இருக்கச் சம்மதம் கொடுத்தானா?” என்று நிதானமாகக் கேட்டார்.

“வேங்கடவா என்னை ஏன் இன்னும் சோதிக்கிறீர்கள்? வேண்டாம். உங்கள் நாடகத்தை நிறுத்தி விடுங்கள். என் கணவனையும் நான் பெற்ற என் பிள்ளையையும் என்னிடம் ஒன்றாகச் சேர்த்து விடுங்கள்.” என்று குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அஞ்சனையை சமாதானப் படுத்திய திருமலைவாசன், “நானும் நீயும் பேசிக் கொண்டிருக்கும்பொழுது என்மீது கோபப்பட்ட உன் கணவன், குழந்தை அனுமனைத் தூக்கிக் கொண்டு மலை மீதிலிருந்து குதிரையில் சேவகர்களோடு சென்று விட்டான். மலைக்குக் கீழேயுள்ள கோனேரிக்கரை அருகே அவன் சென்று கொண்டிருக்கிறான். இப்பொழுது சொல். நானா உன் கணவனைப் பிரித்தேன்?” என்று நயமாகப் பேசினார் வேங்கடவன்.

என்னதான் தெய்வ பக்தி இருந்தாலும் தனக்குப் பிறந்த குழந்தையை மற்றவர்களிடம் தாரை வார்த்துக் கொடுக்க யாருக்கும் மனம் வராது.



இந்த நிலையில்தான் அன்றைக்கு கேசரியும் இருந்தான். தன் மனைவி அஞ்சனை கூட, தன் சொல்லை மீறி வேங்கடவன் பின் சென்றது கேசரிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

இரவு முழுவதும் தூங்காமல் பரிதவித்த கேசரி, பொழுது விடிந்ததும் அஞ்சனைக்குத் தெரி யாமல் தன் குழந்தை அனுமனைத் தூக்கிக் கொண்டு தன் தேசத்திற்கே சென்றுவிடுவது என்று முடிவெடுத்தான்.

மறுநாள்-

அஞ்சனை திருமலைவாசனைத் தரிசிக்கச் சென்ற சமயத்தில் கேசரி அனுமனை மிக ஜாக்கிரதையாக யாருக்கும் தெரியாமல் ஒரு சிறு பெட்டியில் பட்டுத்துணியால் மூடி குதிரையில் ஏறினான்.

குதிரையிலிருந்து குழந்தை விழுந்து விடாமல் இருக்க நாலாபக்கத்திலும் நன்றாகச் சோதனை செய்து கொண்டு யாரிடமும் எதையும் சொல்லாமல் வெகுவேகமாக மலையிலிருந்து இறங்கினான்.

கோனேரி நதிக்கரைக்கு வந்த பின்புதான் கேசரிக்கு சோதனை ஏற்பட்டது. அன்றைக்குப் பார்த்து கோனேரியில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எப்படியிருந்தாலும் கேசரி அக்கரைக்குச் சென்று தான் தன்நாட்டை அடைய வேண்டும். இங்கும் அங்கும் குதிரையில் உலா வந்து கொண்டானே தவிர, கேசரி அக்கரைக்குச் செல்ல முடியாதவாறு வெள்ளத்தின் வேகம் விநாடிக்கு விநாடி அதிகமாகிக் கொண்டிருந்தது.

பரிசலில் சென்று அக்கரையை அடையலா மெனில் கேசரியின் கண்ணில் ஒரு பரிசல் கூடத் தென்படவில்லை. குதிரையோடு ஆற்றைக் கடக்கவும் முடியாது. துணிந்து கடந்துவிடலா மென்றால் கையோடு கொண்டுவந்த குழந்தை அனுமனை எப்படி பத்திரமாகக் கரை சேர்ப்பது என்ற கவலையும் ஏற்பட்டது.

மீண்டும் வேங்கடமலைக்கே ஏறிச் சென்று விடலாம் என்றாலும் மனம் கேட்கவில்லை. கோனேரிக் கரையில் வெள்ளம் வடிவதாகவும் தெரியவில்லை. வெள்ளம் எப்போது வடியும் என்று எத்தனை நாள்கள் தான் கரையில் காத்திருக்க முடியும் என்றும் பலவாறு தனக்குத் தானே கற்பனை செய்து கொண்டு இரண்டுங் கெட்டான் நிலையில் கேசரி பரிதவித்துக் கொண்டிருந்தான்.

அப்போது...............

சித்தன் அருள்............. தொடரும்!

Viewing all articles
Browse latest Browse all 1977

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>