அமைதியாக இருந்த மனதை மணி மந்திரம் உசுப்பிவிட்டது. பெருமாளை திரும்பி பார்த்த அடியேன் அசந்து போனேன். பெருமாள், தாயாரின் முகம் மட்டும்தான் வெளியே தெரிந்தது. அவர்கள் கழுத்துவரை பூக்களாலும், மாலைகளாலும், துளசியாலும் மூடி மறைத்திருந்தார் அர்ச்சகர். அவ்வளவு பூக்களை, அகத்தியர் அடியவர்கள் வாங்கி வந்திருந்தனர். பெருமாளை பார்க்கவே அதிசயமாக இருந்தது.
கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர், பெருமாள் இருப்பதே தெரியவில்லை என்று அர்ச்சகருக்கு செய்தி சொன்னதின் பேரில், பூக்களை அழுத்தி கீழே இறக்கி, பெருமாள் தாயாரின் மார்பு வரை பூக்களை வைத்து, அவர் கரங்கள் வெளியே தெரியும் படி அமைத்தார், அர்ச்சகர்.
சிறிது நேரம் மந்திரோச்சாடனம் நடந்தது. பின்னர் நிவேதனத்துக்காக திரை போடப்பட்டது. அனைத்து அகத்தியர் அடியவர்களும் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஊசி விழும் ஓசை கூட தெளிவாக கேட்க்கும் அப்படி ஒரு அமைதி. இத்தனை மனிதர்கள் சேர்ந்திருக்கும் இடத்தில் இது ரொம்ப அபூர்வம். அகத்தியர், அவர் அடியவர்களை அமைதிப்படுத்திவிட்டார் போலும் என்று தோன்றியது. உண்மையிலேயே, அவர்களை மௌனமாக மனதுள் பாராட்டினேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு விழாவை நடத்துவதென்றால், இப்படித்தான் நடத்த வேண்டும் என்று அகத்தியர் சொல்லாமல் சொல்லி காட்டுவது போல் இருந்தது.
உள்ளேயும், வெளியேயும் நிவேதனத்தை முடித்து, பலி பீடங்களுக்கு அஷ்ட திக்கிலும் உணவளித்துவிட்டு வந்த அர்ச்சகர் தீபாராதனைக்கு தயாரானார். முதலில், மூலஸ்தானத்தில் தீபாராதனை நடக்கும் என்று அறிவித்துவிட்டு உள்ளே சென்றார். அத்தனை பேருக்கும் உள்ளே சென்று தரிசிக்க இடம் கிடைக்காது என்றறிந்த நிறைய அகத்தியர் அடியவர்கள், வெளியே நின்று தீபாராதனையை தரிசித்தனர். அடியேன் நின்ற இடத்தை விட்டு அசையவே இல்லை. எப்பொழுது வேண்டினாலும் பெருமாள் தரிசன வாய்ப்பை கொடுக்கிறார். இம்முறை, மற்ற அடியவர்கள் அதை வாங்கி கொள்ளட்டுமே என்று தோன்றியது. அமைதியாக மனக்கண்ணில் அவர் பாதத்தை நினைத்து வேண்டிக் கொண்டேன்.
உள்ளே தீபாராதனையை முடித்துக் கொண்டு அர்ச்சகர் வெளியே வந்தார். அடியவர்கள் அனைவரும் சுதாகரித்து நின்றனர். அடியேன் மனதுள் திடீரென ஒரு எண்ணம் ஓடியது. அப்படியே அதை உருவகப்படுத்தி பெருமாளிடம் சமர்ப்பித்தேன்.
"பெருமாளே! அகத்தியப் பெருமானே! எத்தனையோ அடியவர்கள், எங்கிருந்தெல்லாமோ இங்கு வந்து நதியில் தீர்த்தமாடி, உழவாரப்பணி செய்து, தங்கள் பூசையில் கலந்துகொண்டு, தங்கள் விண்ணப்பங்களை தெரிவித்துள்ளனர். இங்கு வரவேண்டும் என நினைத்து, பல சூழ்நிலைகளால் வர முடியாமல் போன ஆத்மாக்களும் உண்டு. எங்கிருந்து, உங்களை நினைத்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தாலும், இங்கு வந்திருந்து சமர்ப்பித்தாலும், அதை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றி வைத்து ஆசீர்வதியுங்கள். எல்லோரும் உங்கள் அருளுக்காக காத்திருக்கின்றனர். எந்த குறையும் இல்லாமல், இன்று அந்த அடியவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அள்ளி அள்ளி கொடுத்து உங்களுக்கு சேவை செய்துள்ளனர். எல்லோரும் நலமாக வாழ வாழ்த்த வேண்டும். எல்லோரும் பத்திரமாக வீடு சென்று சேரவும் அருளவேண்டும்!"என வேண்டிக்கொண்டேன்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்து கண்ணை திறக்கவும், தீபாராதனை. என் பார்வைபெருமாளின் முகத்திலும், அவர் கரத்திலும் நின்றது.
"அடியேனின் விண்ணப்பம்! ஞாபகம் இருக்கட்டும் பெருமாளே"என்று கூறி முடித்த அடுத்த நிமிடம், அவர் தலையில் இருந்த ஒரு பூ, வலது கரத்தில் விழுந்து தெறித்தது.
"சரி! அவர் சம்மதித்துவிட்டார்!"என தோன்ற, ஆனந்தமாக தீபாராதனையை அதன் மந்திரத்துடன் உச்சரித்து நிறைவு செய்தேன். அனைத்து பெருமையையும் பெருமாள், அகத்தியர் பாதத்தில் சமர்ப்பித்தேன்.
அனைத்து அகத்தியர் அடியவர்களும் மெய்யுருகி மனம் ஒன்றி தீபாராதனையில் பங்கு பெற்றனர். நிச்சயமாக அவர்கள் அனைவருக்கும் அருள் கிடைத்திருக்கும். என்னென்ன அனுபவங்களை அவர்கள் இனி சந்திக்கப் போகிறார்களோ, அதை அவர்களாக தெரிவித்தால் அன்றி தெரிய வராது, என்று மனதுக்கு தோன்றியது. வந்திருந்த அனைவருக்கும் பூசை முடிந்த பின் தீர்த்தம் கொடுத்து, பெருமாளின் சடாரி சார்த்தப்பட்டது. நிறைய பேருக்கு, பெருமாளின் துளசி, பூ, மாலை, குங்குமம் என பலவித பிரசாதங்களை அர்ச்சகர் வழங்கினார்.
இன்னுமொரு எண்ணம் திடீரென்று உரைக்கவே உடனேயே பெருமாளிடம் விண்ணப்பித்தேன்.
"இன்றைய புண்ணிய நாளில், அகத்தியர் அடியவர்கள் ஒன்று கூடி ஏற்பாடு செய்த இந்த அபிஷேக ஆராதனைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏதேனும் ஒரு நிமித்தத்தை காட்டக்கூடாதா?"என்றேன்.
"உடனேயே தெரியவரும்"என்று உத்தரவு வந்தது.
உடனேயா! அப்படி என்றால், யாராவது வந்து செய்தி சொல்லப்போகிறார்களா? என்றெல்லாம் மனம் எண்ணியது.
சற்று குழம்பி நிற்கையில், திடீரென ஓதிமலை ஓதியப்பர் ஞாபகத்துக்கு வந்தார்.
"அடடா! இறைவன் குளிர்ந்தால், மழை வருமே! ஓதிமலை போல இங்கும் வறுத்தெடுத்து விடுவாரா? என்று எண்ணி நிற்கையில், மழை தொடங்கியது.
மனம் மெதுவாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றது.
நிவேதன ப்ரசாதங்களான, புளியாதரை, தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், அகத்தியர் அடியவர்கள் கொண்டுவந்த இனிப்பு வகைகள் என அனைத்தையும் விநியோகம் செய்ய 6 பேரை தெரிவு செய்தேன். அவர்களுக்கு ஒரே ஒரு உத்தரவு தான். வரிசையாக நின்று கொடுக்க வேண்டும். அடியவர்கள் வரிசையில் வந்து வாங்கி கொள்வார்கள். மேலும் ஒருவர் முதலில் நின்று அனைவருக்கும் "தட்டை"கொடுங்கள். விநியோகம் நடக்கையில், யாரேனும் ஒரு அடியவர் வந்து "நானும் என் கையால் விநியோகம் செய்கிறேனே!"என வேண்டிக் கொண்டால், கேட்டவர் விலகி வழிவிட்டு, அவர் வேண்டுதலையும் நிறைவேற்ற வேண்டும்!"என்றேன்.
"இரண்டு நிமிடம் பொருத்துக் கொள்ளுங்கள்! உடன் வருகிறேன்! என்று கூறி, அர்ச்சகரை தேடி ஓடினேன். அடியேன் வருவதை கண்டதும் அவருக்கு புரிந்தது. வேகமாக உள்ளே சென்று பெருமாள் பாதத்தில் வைத்திருந்த பையுடன், ஒரு பாத்திரத்தில் பெருமாள் மார்பு, கரங்கள், பாதம், தாயார் பாதத்தில், கையில் சார்த்தியிருந்த மஞ்சள் பொடியை நன்றாக சுரண்டி எடுத்து, போட்டுத் தந்தார். நிமிர்ந்து பெருமாளை பார்த்து, "மிக்க நன்றி பெருமாளே! பிறகு வருகிறேன்!"என்று கூறி, விநியோகம் தொடங்க இருந்த இடத்துக்கு வந்தேன்.
விநியோகம் தொடங்கியது. மிக அமைதியாக, எந்த உந்தும், தள்ளும் இன்றி, கையில் தட்டை ஏந்தி வந்து, அடியவர்கள் பிரசாதத்தை வாங்கி கொண்டனர். எல்லோருக்கும், அவர்கள் விருப்பப்படி, பிரசாத அளவு கொடுக்கப்பட்டது. இல்லை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது. அந்த வரிசையின் கடைசியில், சிறிதளவு மஞ்சள் ப்ரசாதத்துடன் ஒரு "786"எண் கொண்ட ரூபாயை ஒவ்வொரு அகத்தியர் அடியவருக்கும் "பெருமாளின் பரிசு! பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்"; "இது மஞ்சள்பொடி பிரசாதம். பெருமாளிடமிருந்து உங்களுக்கு மருந்து. உள்ளுக்கு சாப்பிடுவதற்கு"என்று கூறி கொடுக்கப்பட்டது.
"சித்தன் அருளை"வாசிக்கும் அனைவருக்கும் "786"எண் பற்றி தெரியும் என்பதாலும், அதுவும் பெருமாளின் பாதத்தில் சமர்ப்பித்து கொடுக்கப்பட்டதாலும், மிகுந்த சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டனர். அதில் ஒரு சிலர், வாங்கிய உடனேயே "எண்ணை"பார்த்து, "எவ்வளவு நாளாக தேடிக்கொண்டிருக்கிறேன், கோடகநல்லூர் பெருமாள்தான் முதன் முறையாக ஆசி கூறி கொடுத்திருக்கிறார்"என்று கூறி வாங்கிச்சென்றனர். ஒரு கட்டத்தில், "786"எண் கொண்ட ரூபாய் தீர்ந்து போய்விட, தொடர்ந்து "354"என்கிற எண் கொண்ட ரூபாய் கொடுக்கப்பட்டது.
"354"என்றால் ஓதியப்பர் (சுப்பிரமணியர்). சுப்பிரமணிய சக்கரத்தில் "354"என்கிற எண் தமிழ் எழுத்தாக மாற்றி எழுதப்பட்டிருக்கும். ஆகவே, இந்த முறை கோடகநல்லூரில், "354"என்கிற எண்ணையும் பெருமாள், அகத்தியர் ஆசிர்வாதத்துடன் மீதி இருந்த அனைவருக்கும் கொடுத்து முடித்தோம்.
பெய்த மழையில் நனைந்தபடியே அனைத்து அகத்தியர் அடியவர்களும் நிவேதன பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு, பின் அந்த தட்டை அதற்கென கோவிலுக்கு வெளியே வைத்திருந்த ஒரு பெட்டியில் கொண்டு போட்டனர். கோவில் பிரகாரத்தை சுத்தமாக வைத்திருக்க இயற்கையாகவே அவர்களுக்குள் அகத்தியர் உத்தரவு போட்டுவிட்டார் போலும். அதற்காக அடியேன் மிகவும் கடமை பட்டுள்ளேன்.
அடுத்த அரை மணி நேரத்தில், கருடர் மண்டபத்திலிருந்த இரு பீடங்களை அதன் இடத்தில் சுவாமி சன்னதிக்குள், ஒரு சில அகத்தியர் அடியவர்கள் சேர்ந்து தூக்கி கொண்டு வைத்தனர். இன்னும் சில அகத்தியர் அடியவர்ட்கள் ஒன்று சேர்ந்து கருட மண்டபத்தை, பிரகாரத்தை, நடை பாதையை பெருக்கி சுத்தம் செய்து பளிச்சென ஆக்கிவிட்டனர். வெளியே வந்து பார்த்த அர்ச்சகரும், நிர்வாகிகளும் அசந்து விட்டனர்.
"இங்குதான் ஒரு அபிஷேக பூசை நடந்ததா? என்று கேட்கிற அளவுக்கு மிக மிக சுத்தம் பண்ணிவிட்டார்களே, இவர்கள்!"என்று அர்ச்சகர் அனைத்து அகத்தியர் அடியவர்களையும் வாழ்த்தினார். அதை கேட்கிற பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.
இரு அகத்தியரின் அபிமான அடியவர்கள் கோடகநல்லூர் வந்து சென்றபின், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அடியேனுடன் பகிர்ந்து கொண்டனர். அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.
அனுபவம் ஒன்று). திரு ஜெயராமன் பெங்களூருவில் வசிக்கிறார். போன வருடம் 2016இல் "அந்த நாள் >> இந்தவருடம்"என்கிற அந்த புண்ணிய நாள் அன்று, கோடகநல்லூர் வந்து, அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்ட பொழுது ஏதோ தோன்றவே, பெருமாளிடம் தனக்கு ஒரு நல்ல வேலை பெங்களூருவில் கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டாராம். கோடகநல்லூர் வந்து சென்ற பின், உடனேயே திருப்பதியும் சென்று ஸ்வாமியை தரிசனம் செய்கிற பாக்கியம் அவருக்கு கிடைத்தது. 90 நாட்களில், அவர் விரும்பியபடி, பெங்களூருவில் நல்ல வேலை கிடைக்க, இந்த வருடமும் வந்து பூசையில் கலந்து கொண்டார். அதற்கு முன் அடியேனை தொடர்பு கொண்டு "நான் பெருமாளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்! என்ன செய்யலாம் என்று கூறுங்களேன்!"என்றார். இந்தவருடமும் வந்து பூசையில் கலந்து கொள்ளுங்கள்! பெருமாளே வழி காட்டுவார், என பதிலளித்தேன். இந்த முறை வரும் பொழுது, இன்னொரு புதிய வேண்டுதல் அவருடன் சேர்ந்து கொண்டது. தனக்கான வேண்டுதல் அல்ல. அவரது சகோதரி ஒரு வீடு கட்டி முடித்துவிட்டார். ஆனால் வீடு கட்டி கொடுத்தவர் வீட்டு சாவியை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். வருடம் இரண்டு ஓடி விட்டது. கோவிலுக்கு கிளம்பும் முன் தன் சகோதரியை அழைத்து "நான் கோடகநல்லூர் சென்று உனக்காக வேண்டிக் கொள்ளப்போகிறேன்! பெருமாள் நிச்சயம் உனக்கு உதவி புரிவார்"என்று கூறிவிட்டு வந்து தீபாராதனையின் பொழுது விண்ணப்பத்தை சமர்ப்பித்து விட்டார்.
கோடகநல்லூர் பூஜை முடிந்து ஊருக்கு திரும்பியவருக்கு, மகிழ்ச்சியான செய்தியை பெருமாள் கொடுத்துவிட்டார். வீட்டை கட்டியவருக்கு, அந்த பூசை நடந்த தினம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. வீட்டு சாவியை, இவரது சகோதரியை கண்டு கொடுத்து, நீங்கள் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி கொடுத்துவிட்டு சென்றாராம். இந்தமுறையும் ஈமெயில் வழி அடியேனை தொடர்பு கொண்டு நடந்ததை கூறி, "பெருமாள் உடனேயே அருளியதற்கு, நன்றியாக நான் என்ன செய்ய வேண்டும்?"என்றார். முடிந்தால், சனிக்கிழமை அன்று கோடகநல்லூர் வந்து பெருமாளுக்கு பிரகாரத்தில் சுற்று விளக்கு போடுங்கள், என்றேன்.
அந்த நாளில் சுற்று விளக்கு போட்டவர்களிடம் ஒரு விஷயத்தை கூற மறந்து போனது. அதை இங்கே தெரிவிக்கிறேன்.
அடியேன் பலமுறை சுற்று விளக்கு போட்டிருக்கிறேன். அது தனியாகவோ, அல்லது சிறு குழந்தைகளின் உதவியுடனோதான் இருக்கும். முதல் முறை விளக்கு போடச்சொன்ன பெருமாள் கூடவே, "நீ ஏற்றும் தீபத்தில் என் வலது பாதம் இருக்கும். கண் மூடி த்யானம் செய்து பார்"என்றார். அந்த முறை முதல், ஒவ்வொரு முறையும் அவர் பாதத்தை பார்த்திருக்கிறேன். சில வேளை பெருமாளின் வலது கால் பாதத்துடன் இன்னொரு வலது கால் பாதம் (மெட்டியுடன்) தெரியும். அதை தாயாரின் பாதமாக பாவித்து வணங்கி வருகிறேன். அன்று சுற்று விளக்கு போட்டவர்கள் யாரேனும் கண் மூடி பெருமாளின் பாதத்தை தரிசித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், விளக்கு போட்டவர்கள் அனைவரும், பெருமாள் பாதத்துக்கு விளக்கு போட்ட பாக்கியசாலிகள். மற்றவர்களுக்கு, அடுத்த முறை பெருமாள் அருளுவார் என்று நம்புகிறேன். அடுத்த முறை என்றால், அடுத்த வருடம் அந்த நாள் என்று அர்த்தமல்ல. விதியிருப்பின், பெருமாள் அழைத்தால், சீக்கிரமாகவே அது நடக்கலாம். வேண்டிக்கொள்ளுங்கள்.
இரண்டு). திரு சுவாமிநாதன், பாண்டிச்சேரியில் வசிக்கிறார். சிறந்த அகத்தியர் அடியவர். தன் வீட்டில் அகத்தியர் லோப முத்திரை தாயின் விக்ரகங்களை வைத்து தினமும் பூசை செய்து வருகிறார். நிறைய அனுபவங்களை, அகத்தியரின் வழிகாட்டுதல்களை பெற்றவர். இந்த வருடம் அந்தநாள் அன்று தன் மனைவியுடன் தரிசனத்துக்கு வந்திருந்தார். அவர் மனைவியும், அகத்தியர், லோபாமுத்திரையின் சிறந்த பக்தை. கோடகநல்லோருக்கு கிளம்பும் முன் பூசை அறையில் நின்று வேண்டிக்கொள்ள, அவர் மனைவிக்கு லோபா முத்திரை தாயின் ஆசிர்வாதம் வாக்காக கிடைத்துள்ளது.
"சிறு குழந்தையாக, பச்சை சட்டை, பச்சை பாவாடை போட்டு உனக்கு நான் அங்கு வந்து காட்ச்சியளிப்பேன்!"என்று அருள் வாக்கு கிடைத்துள்ளது!
திடமான நம்பிக்கையுடன் இருவரும் கோடகநல்லூர் வந்து சேர்ந்தனர்.
சித்தன் அருள்........................ தொடரும்!